தஞ்சாவூர்:  தஞ்சாவூரில் அரசு கல்லூரி விடுதி வார்டன் வீட்டு முன்பக்க கதவு பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சை பழைய ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் ஆறுமுகம் (53). இவர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார். தொடர் விடுமுறை என்பதால் கடந்த 22ம் தேதி ஆறுமுகம் தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு கிராமத்திற்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 


உள்ளே  சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க ஆரம், நெக்லஸ், மோதிரங்கள் உட்பட 11 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 1.20 லட்சமாம்.


இதுகுறித்து ஆறுமுகம் தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதேபோல் தஞ்சை அருகே வல்லத்தில் வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்து ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இந்த சிறுவன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


தஞ்சை அருகே வல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்வர் பாட்சா என்பவரின் மகன் ஷேக்தாவூத் (34). இவரது மனைவி பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கடந்த 17ம் தேதி காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு தனது கணவர் ஷேக் தாவூதிற்கு தகவல் அளித்தார்.


இதுகுறித்து ஷேக்தாவூத் வல்லம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சிசாரா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வல்லம் பகுதியில் சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அந்த சிறுவன் பாபநாசம் அருகே மேலகபிஸ்தலம் செங்குட்டுவன் என்பவரின் மகன் என்று தெரிய வந்தது.


தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஷேக் தாவூத் வீட்டில் புகுந்து பணத்தை திருடியது அந்த சிறுவன் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுவன் மீது பாபநாசம், அரியலூர், கல்லக்குடி, கீழப்பழுவூர், திருமானூர் போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.