இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 15 -ம் தேதி முதல் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9 நாட்களிலும் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜை நடைபெறும். புரட்டாசி மாதம் அம்மாவாசைக்கு பிறகு பூர்வ பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது  இரவுகளே இந்த நவராத்திரி திருவிழாவாகும். நவராத்திரி முடிந்து வரும் தசமி திதியை விஜயதசமி என்று கொண்டாடி பூஜையை இந்துகள் நிறைவு செய்கின்றனர். பொதுவாகவே, பிரதமை அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைப்பது வழக்கம்.

Continues below advertisement

இந்நிலையில் எல்லா திதிகளிலும் இறையம்சம் இருக்கிறது என்பதை  உணர்த்துவதற்காக நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நவராத்திரி வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும், சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தங்கள் படிப்புக்கு தேவையான விஷயங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று அனைத்துத் தளத்திலும் தொழில் செய்பவர்கள் அயூத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள். விஜயதசமி நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஞானம், வித்தை, கல்வி மற்றும் யோகத்துக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து விளங்கலாம்.

Continues below advertisement

இந்நிலையில் இந்த நாளில் கல்வி கற்கவும், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடையவும் வழிபடுவது மிகவும் சிறந்தது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை  வழிபடுவதும் ஆராதிப்பதும் அம்பிகைக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி, சுமங்கலிகளையும், பெண்களையும் வரவேற்று, மங்கலப் பொருட்கள் வழங்குவதும் இல்லத்தில் ஐஸ்வர்யம் பொங்கச் செய்யும், தீர்க்கசுமங்கலியாக வாழச் செய்யும் என்பதும்  நம்பிக்கை‌. இத்தகைய சிறப்புமிக்க நவராத்திரி விழா, முதல் மூன்று நாட்கள் துர்க்கை  அடுத்த மூன்று நாட்கள் மகாலஷ்மி இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகிய தெய்வங்களை ஒன்பது நாட்கள் வழிபடுவது நவராத்திரியின் சிறப்பாகும். வீடுகள் மற்றும் ஆலயங்களில் கொலு பொம்மைகள் அமைத்து தினசரி பக்தி பாடல்கள் பாடி நைவைத்தியம் செய்து வழிபாடு செய்வார்கள்.  நவராத்திரி பண்டிகையின் பத்தாம் நாள் விஜயதசமி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்குவார்கள். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.  அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள (சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி) தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. பள்ளியில் சரஸ்வதி அம்மாள் சிலையை வைத்து மாலை அணிவித்து, பழங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வைத்து மாணவர்கள் நன்கு கல்வி கற்க வேண்டி சிவாச்சாரியார் வேதமந்திரம் ஓதி படையலிட்டு வழிப்பாடு நடத்தினர்.

அதனை தொடர்ந்து, பள்ளிக்கு சேர்க்கைக்கு வந்த  குழந்தைகளை அழைத்து பெற்றோரின் மடியில் அமர்த்தி ஆசிரியர்கள் குழந்தைகளின் கை பிடித்து, தாம்பாளத்தில் பரப்பி வைத்திருந்த நெல்லில் தமிழ் எழுத்தில் முதல் எழுத்தான 'அ'கரம் என்ற எழுத்தை மூன்று முறை எழுத கற்றுக் கொடுத்து கல்வியை தொடங்கினர். மேலும், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இன்று பள்ளியில் சேர்ந்த மாணவருக்கு பள்ளி நிர்வாகத்தினர் ரெயின் கோட் வழங்கி வரவேற்றனர்.