தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திருச்சி அரசு மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் குறித்து  முகாமிட்டுள்ளனர்.


அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையை பார்வையிட்டனர். மேலும், அதன் கூடுதல் இயக்குநர் மற்றும் முதல்வர் பிரபாகரனுடன் கலந்துரையாடி, ஊராட்சித் துறை அமைப்பு முறை, நிர்வாகம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொண்டனர்.


இக்கலந்துரையாடலில், திருச்சி‌ தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் காவியாஸ்ரீ, தாரணி, திவ்யவர்ஷினி, பிரியதர்ஷினி, காயத்ரி, புகழரசி, வாசுகி, சாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். இதுமட்டுமின்றி, வரும் வாரங்களில் பட்டுக்கோட்டையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளை சந்தித்து பணி அனுபவம் பெற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதேபோல் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வீரமரசன்பேட்டையில் தஞ்சை ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகளுக்கான ஊரக வேளாண் பணி அனுபவ திட்ட பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு வேளாண் அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். துணை அலுவலர் எழில்அமுது, ஊராட்சித் தலைவர் சிவ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் நெல் மற்றும் வாழையில் விதை நேர்த்தி செய்வது குறித்து கல்லூரி மாணவிகள் மகேஸ்வரி, ரூபாஸ்ரீ, பொன்மொழி, மகேஸ்வரி, பிரீத்தா, ரம்யா ஆகியோர் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.


முனைவர் பாண்டியராஜன், உதவி பேராசிரியர்கள் சூரியபிரியா, நிவேதா, ரேவதி ஆகியோர் வழிகாட்டுதலின் படி வேளாண் இறுதியிண்டு மாணவிகள் ரசிகா, சாய்சிமிகா ஆகியோர் திட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ருக்கையா பேகம் வரவேற்றார். ரம்யா விழாவைத் தொகுத்து வழங்கினார். நித்யஸ்ரீ நன்றி கூறினார். இதில் வீரமரசன்பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


இந்த முகாம்கள் மாணவிகளின் படிப்பு அனுபவத்திற்கு உறுதுணையாக அமையும். நேரில் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து அதன் வாயிலாக வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள முகாம்கள் பயன்படுகின்றன. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடும் நெல் ரகங்கள், இயற்கை முறை சாகுபடி, பாரம்பரிய நெல் வகைகளான மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி, தங்க சம்பா போன்ற நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறியும் வாய்ப்புகள் கிடைக்கிறது. மேலும் விவசாயிகள் பயிரிட்டுள்ள ரகங்களை பார்வையிட்டு அதன் விவசாய நடைமுறைகளை மாணவர்கள் கேட்டறியும் வாய்ப்புகள் இதன்வாயிலாக கிடைக்கிறது. இதேபோல் பல பகுதிகளுக்கும் சென்று விவசாயிகள் மேற்கொள்ளும் நவீன இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறியும் வாய்ப்புகள் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.