தஞ்சை மாவட்டம், திருநாகேசுவரம், நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இக்கோயிலின் பெரிய பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு சன்னதி உள்ளது. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து, அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார் என்பது ஐதீகம்.




நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமை உடையதாகும். சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாககன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரையாகும். இக்கோயில் சேக்கிழார் திருப்பணி செய்த தலமாகும்.




இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலான நவக்கிரஹங்களின் ராகு பககவான் கோயிலின் நாகநாதசுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ராகு காலத்தில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாநில,மாவட்டத்திலிருந்து வந்து அபிஷேகம் செய்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தி செல்வார்கள். அதனால் இக்கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இக்கோயிலின் முகப்பின் எதிரில் டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இருக்கின்றது. இதனால் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து வரும் பக்தர்கள், கோயிலுக்குள் நுழையும் போதே, டாஸ்மாக் கடை இருப்பதால், வேதனையுடன் சென்ற வருகின்றார்கள். இரவு நேரங்களில் குடிமகன்கள் குடித்து விட்டு, கோயிலிக்குள் செல்லும் பாதையில் நின்று இடையூர் செய்கின்றனர்.





இதனையடுத்து, கடந்த ஆட்சி காலங்களில் இந்து மற்றும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் செய்தும் இது வரை கோயிலின் முகப்பின் எதிரிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றாமல் இருந்து வருகின்றனர். புகழ்பெற்ற நவக்கிரஹங்களின் ஒன்றான ராகுபகவான் கோயிலான நாகநாத சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு ஏராளமானோர் வந்து செல்லும் கோயில் முன்பு உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி,  மாவட்ட நிர்வாகத்திடம், இந்து அமைப்புகள் மற்றம் அனைத்து கட்சி சார்பில் பல்வேறு புகார்கள் அனுப்பியும், கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த செப்டம்பர் மாதம், தமிழகத்தில், கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிகள் அருகில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.  ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சர்  பேச்சை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.




அமைச்சர் உத்தரவிட்டும், டாஸ்மாக் அதிகாரிகள், கடையை அகற்றாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. எனவே, கோயில்களின் அருகே இருக்கும் மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே இருக்கும் நவகிரகங்களில் ஒன்றான ராகு பகவான் தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் அருகே இருக்கும் மதுக்கடையை கும்பாபிஷேகத்திற்கு முன்பே அகற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன், மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். தமிழக அரசு உடனடியாக, கோயில்களில் முன்பு உள்ள டாஸ்மாக் கடையையும், ராகபகவான் தலமான நாகநாத சுவாமி கோயிலின் முன்புள்ள டாஸ்மாக் கடையை அகற்றா விட்டால், கடையை அகற்றும் வரை உண்ணாவிரத  தொடர் போராட்டம் செய்யப்படும் என அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தெரிவித்துள்ளார்.