திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட 31 வார்டுகளில் சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட தலைநகராக திருவாரூர் இருப்பதால் அண்மை காலமாக குடியிருப்பு பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு நெய்விளக்கு தோப்பு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. நகர் முழுவதும் உருவாகும் டன் கணக்கிலான குப்பைகள் நெய்விளக்குத்தோப்புப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொளுத்தி விடுவதால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படுகிறது. 



 

மழைக் காலங்களில் நகராட்சியில் பல இடங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கழிவறை கழிவுநீர் குப்பை கிடங்கில் முன்பகுதியில் வெளியேற்றுவதாகவும், அந்த நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பைக் கிடங்கு அருகில் இருக்கும் மயானத்தில் நகராட்சிப் பகுதிகளிலிருந்து செல்லும் 70 சதவீத சடலங்கள் எரியூட்டப்படுகிறது. மயானத்தில் இடைவிடாமல் சடலங்கள் எரிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மயானத்தின் சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமாகி இருக்கிறது. குப்பைக் கிடங்கு மற்றும் மயானத்திலிருந்து வெளியேறும் புகையினால் இருதய நோய் மற்றும் பார்வையிழப்புகளை அப்பகுதி மக்களுக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது. நெய்விளக்குத்தோப்பு பகுதி மக்கள் மனைவரி, குடிநீர்வரி என அரசின் அனைத்து வரிகளையும் செலுத்துவதாக கூறுகின்றனர். இப்பகுதியில் மக்கள் வசித்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தே கடந்த கால நகராட்சி நிர்வாகம் குடியிருக்க அனுமதி வழங்கியிருக்கிறது. அடுத்து வரும் நிர்வாகமும் கடந்த கால நடைமுறைய பின்பற்றி வருகிறது. எனவே மக்களைப் பாதிக்காத வகையில் குப்பை கிடங்கு மற்றும் மயானத்தை சீரமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

இதுகுறித்து நெய்விளக்கு தோப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், கடந்த நான்கு தலைமுறைகளாக இந்த பகுதியில்தான் நாங்கள் வசித்து வருகிறோம். நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் நகராட்சி குப்பை கிடங்கை மக்கள் இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியர், மற்றும் பல அரசுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், என பலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பல நபர்களுக்கு யானைக்கால் நோய், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறோம். உடனடியாக நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என இந்த பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.