தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து சிறுமி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டை பல்லாகுளம் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகள் காவியா (8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளியில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த காவியா நேற்று மாலை அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து காவியாவின் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காவியாவின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





இளம்பெண் சாவு:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மருத்துவர்கள் கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் இளம்பெண் இறந்து விட்டார் என தெரவித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், கூலித் தொழிலாளி. இவரது மனைவி நீவிதா (23). இவர் இரண்டாவது குழந்தை பேறு அறுவை சிகிச்சைக்காக கடந்த 24ம் தேதி பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

தொடர்ந்து 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், குழந்தையும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். அப்போது நீவிதாவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்ட போது திடீரென வலிப்பும், தொடர்ந்து மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  

ஆனால் அப்போது அருகில் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் இல்லை என உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர் உறவினர்கள் அழைத்த பிறகு மருத்துவர்கள் வந்து, நீவிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். நிலைமை மோசமாகவே ஆக்சிஜன் பொருத்தி, ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது நீவிதா சுயநினைவு இல்லாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி இரவு நீவிதா தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். முதல் தடவை பெண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது. ஆரோக்கியமான நிலையில் இருந்த நீவிதா இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு இறந்துள்ளார். மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே நீவிதா இறந்ததாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  

இது குறித்து, அவரது சகோதரர் நவீன் குமார் பேராவூரணி காவல் நிலையத்தில், மருத்துவர்கள் மீது புகார் அளித்தார்.  தொடர்ந்து, பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே, இறந்து போன நீவிதாவின் உறவினர்கள் கைக்குழந்தையுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு உருவானது. பாதிக்கப்பட்ட நீவிதாவின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி இன்ஸ்பெக்டர் (பொ) சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.