தஞ்சாவூர்: தஞ்சாவூர் அவ்வபோது சாரல் மழை பெய்து தரைக்கடை வியாபாரிகளை அச்சறுத்தி வருகிறது. இதனால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.


தமிழகம் முழுவதும் கனமழை பெய்தாலும் தஞ்சை பகுதியில் கனமழை இல்லை. முக்கியமாக தஞ்சை நகர் பகுதியில் லேசாக மழை பெய்தாலும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் பகுதிகளில் நேற்று மதியம் முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. இதனால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பிய மக்கள் நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது. 


தஞ்சை நகர் பகுதியில் அவ்வபோது பெய்து மிரட்டும் மழையால் தரைக்கடை வியாபாரிகள் தான் அச்சத்தில் உள்ளது. சாரல் மழை பெய்யும்போது கடைகளை தார்ப்பாய்களை கொண்டு மூடுவதும், மழை நின்றவுடன் கடைகளை திறப்பதுமாக வியாபாரிகள் திணறி வருகின்றனர். 


தீபாவளிக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தஞ்சாவூரில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. புத்தாடை, அழகு பொருட்கள் என சுற்றியுள்ள கிராமப்பகுதியில் இருந்து மக்கள் குவிகின்றனர். இதனால் பஸ்களில் அதிகளவு கும்பல் கடைத் தெரு பகுதியில் காண முடிந்தது. நாளையும், நாளை மறுநாளும் காந்திஜி சாலை முழுவதும் மிகுந்த நெருக்கடி இருக்கும். மக்கள் கும்பல அதிகளவில் காணப்படும். 




தீபாவளி வரும் 12ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் வாங்கவும் மக்கள் குவிந்து வருகின்றனர். தஞ்சையில் உள்ள ஸ்வீட் ஸ்டால்களில் மக்கள் கும்பல் அதிகளவில் காணப்படுகிறது. 
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக முன்பே பொதுமக்கள் புத்தாடை, பட்டாசு வாங்க தொடங்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தஞ்சை பகுதியில் தீபாவளி விற்பனைக்காக எடை குறைவான டிரஸ்ஸர் சில்க் வடிவில் செமி பனாரஸ் என்கிற துரூப் சேலைகள் வருகின்றன. அணிவதற்குக் கூடுதல் மென்மையுடன் கூடிய இந்த சேலைகள் ஏறத்தாழ ரூ.1, 700 என்ற அளவில் விற்பனையாகிறது. இதேபோல் வாழை நார் காட்டன், வாழைநார் சில்க் சேலைகள் ரூ. 2 ஆயிரத்திலிருந்து விற்பனைக்கு வந்துள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் பட்டு போன்று பார்டர் இல்லாமல் டிரஸ்ஸர் சில்க் ரூ. 560 முதல் கிடைக்கிறது.


கடந்த ஆண்டை விட நடப்பாண்டு விலை ஏறத்தாழ 20 சதவீதம் கூடுதலாக உள்ளது. கடந்த ஆண்டு ரூ. 500 , 600க்கு விற்கப்பட்ட டாப் தற்போது ரூ. 800, 900 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல, ஒவ்வொரு ஆடையின் விலையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் காந்திஜி சாலையில் தரைக்கடை அமைத்துள்ள வியாபாரிகளிடம் ஆடைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 


தஞ்சையில் காந்திஜிசாலை, அண்ணாசாலை, கீழராஜவீதி, தெற்குவீதி, பகுதிகளில் அதிகளவில் தரைக்கடை வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். இன்று காலை முதல் மழை இல்லாததால் தரைக்கடைகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மதிய வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து நின்று மிரட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளையும், நாளை மறுநாளும் மழை இல்லாமல் இருந்தால் தீபாவளி விற்பனை கனஜோராக நடக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். தீபாவளி விற்பனையாக குறைந்த விலைக்கு செப்பல்கள், போர்வைகள், கால் மிதியடிகள் என்றும் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன.