தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே நள்ளிரவில் தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்த, அரசு மேல் நிலைப் பள்ளியில்  +2 படிக்கும் காதல் ஜோடிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் கோயிலில் வைத்து தாலி கட்டச் செய்து கட்டாயத் திருமணம்  செய்து வைத்துள்ளனர். இருவருக்கும் இன்னும் 18 வயது பூர்த்தி அடையாததால், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கட்டாய தாலி கட்டிய மாணவர், அதிமுக கிளைச் செயலாளர் மற்றும் திமுக பிரமுகர் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர். திருவோணம் அருகேயுள்ள பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).அக்கரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவிதா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும், இவர்கள் பல நாட்களாக இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.


இந்நிலையில், மாணவர் ரமேஷ் பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்த நரேன் (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நண்பருடன் அக்கரைவட்டம் கிராமத்திற்கு மோட்டார் பைக்கில் வந்து தனது காதலியுடன் அவரது வீட்டின் முன்பாக நள்ளிரவு 12.30 மணியளவில் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்ளார். மாணவர் நரேனும் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். நள்ளிரவில் காதலர்கள் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த குடிபோதையில் இருந்த சிலர் மூன்று பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது தனது மோட்டார் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு நரேன் மட்டும்  அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.




இதைத் தொடர்ந்து, அக்காதல் ஜோடியின் பெற்றோர்க்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்த உள்ளுர் பிரமுகர்கள் அக்கிராமத்தில் உள்ள முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்று அதிகாலை 3 மணியளவில் ராகேஷை கட்டாயப்படுத்தி ஜீவிதாவின் கழுத்தில் தாலி கட்டச் செய்துள்ளனர். அதன் பின்னர் திருமணச் சடங்குகளும் செய்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவோணம் காவல் நிலைய போலீஸார் காலை 7 மணிக்கு சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி ராகேஷ்-ஜீவிதா ஜோடியை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊர் நல அலுவலர் கமலா தேவி அளித்த புகாரின்பேரில், திருவோணம் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147 (சட்டவிரோதமாக கூடுதல்), 341 (சட்டவிரோதமாக தடுத்தல்) மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் பிரிவு 9 (10) ஆகியவற்றின் கீழ் 8 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து. 17 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர் ராகேஷ், அதிமுக கிளைச் செயலாளர் ராமன் (62), திமுக பிரமுகர் ராஜா (50), உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சுப்பிரமணியன்  என்ற மேலும் ஒரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.