பிரதமர் நரேந்திரமோடியும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நேற்று நள்ளிரவு வாரணாசி தெருக்களில் நடந்து சென்ற காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.


பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த திங்கள் கிழமை வாரணாசி சென்றிருந்தார். அப்போது  மக்களிடம் மிகவும் பிரபலமான காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பனாரஸ் ரயில் நிலையத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பார்வையிட்டார். முன்னதாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும் வழி மிகவும் குறுகியதாக இருந்தமையால் அவ்வழியாக  பக்தர்கள் செல்லும் போது மிகுந்த சிரமத்தைச் சந்தித்தனர். இதனையடுத்து கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாக செல்லும் வகையில் ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத்திட்டம் உருவாக்கப்பட்டதை  மோடி திறந்து வைத்தார்.





இதனையடுத்து மாலை வேளையில் கங்கா ஆரத்தி மற்றும் படகுத் துறையில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியை பிரதமர் பார்வையிட்டார். பின்னர் காரில் பயணத்தப்படி வாரணாசி தெருக்களில் சென்ற மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் காசி நகரின் குறுகிய சாலைகளில் நகர்ந்துக் கொண்டிருந்த போது காவி அணிந்திருந்த ஒரு நபர் அவருக்கு அங்க வஸ்திரம் வழங்க அனுமதிக்கப்பட்டார். இதை காரில் இருந்தபடி கை கூப்பி ஏற்றுக் கொண்ட மோடி, புன்னகையுடன் பெற்று கொண்டார். இந்நிலையில் திடீரென பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும் காரில் இருந்து இறங்கி பாதுகாப்புப்படையினர் சூழ வாரணாசியின் முக்கிய வீதிகளில் நடந்து சென்றனர்.  இதனைக்கண்ட மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றதோடு, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். 










 


இதுக்குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், காசியில் முக்கிய வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்கிறோம் எனவும், இந்த புனித நகரத்தில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது எங்கள் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளதோடு, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இதோடு மற்றொரு டிவிட்டர் பதிவில், பனாரஸ் ரயில் நிலையத்தை மேம்படுத்தவும், அங்கு வரும் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசிகளை உறுதி செய்வதற்கு நாங்கள் பணியாற்றிவருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.  குறிப்பாக சாம்பல் நிற குர்தா, வெள்ளை பைஜாமா, கருப்பு ஜாக்கெட் அணிந்து, தோளில் சாம்பல் நிற மப்ளர் அணிந்திருந்தபடி வாரணாசி தெருக்களில் மோடி நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.