தஞ்சாவூர்: கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தலைமையில் விவசாயிகள் பலர் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். அப்போது, 2022 - 23ம் ஆண்டில் சம்பா, தாளடி பயிர்களில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்ட விதிகளின்படி, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததைக் கண்டிப்பதுடன், கால தாமதத்துக்குரிய வட்டியுடன் வழங்க வேண்டும்.
முன்னறிவிப்பு இல்லாமல் முறை பாசனத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதேபோல, விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் பருத்தி செடிகள் காய்ந்து, விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை உணர்த்தும் வகையில் நெற்றியில் பஞ்சுகளை கட்டிக் கொண்டு வந்து கலெக்டரிடம் முறையிட்டனர். தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமார்: மேட்டூர் அணையில் நீர்மட்டம் 90 அடியாக குறைந்துவிட்டது. கர்நாடகத்திலும், கேரளத்திலும் குறிப்பிட்ட காலத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் இல்லை. வறட்சி காலத்தில் எவ்வளவு தண்ணீர் பகிர்வது என்கிற அட்டவணை போடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தண்ணீர் கேட்டுப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: கல்லணைக் கால்வாய் பாசனத்துக்கு உள்பட்ட வடசேரி வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால் போன்ற ஏ, பி வாய்க்கால்களுக்குக் கூட இன்னும் தண்ணீர் வரவில்லை. எனவே, கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் விட வேண்டும்.
திருவோணம் வி.எஸ். வீரப்பன்: தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே, ஒன்றிய அளவில் ஒழுங்குமுறை விற்பனைக் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலமாக தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். மேட்டூர் அணை திறக்கப்பட்டு, 18 நாள்களாகியும் திருவோணம் பகுதிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை.
அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹீம்: குறுவை பயிர்கள் கதிர் விடும் நிலையில் தண்ணீர் இல்லாமல் காய்கிறது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து குறுவை பயிரைக் காப்பாற்ற உடனடியாக 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் விட வேண்டும்.
அம்மாபேட்டை பி. செந்தில்குமார்: காவிரி நடுவர் மன்ற வழிகாட்டுதலின்படி பற்றாக்குறை காலத்தில் நீர் பகிர்வு அடிப்படையில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் பற்றாக்குறை காலத்தில் சிறந்த நீர் நிர்வாகத்தைச் செயல்படுத்த வேண்டும்.
பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: கல்லணைக் கால்வாயில் தரைதளம், பக்கவாட்டில் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும். பழுதான மதகுகளுக்கு புதிதாக மாற்ற வேண்டும்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.