தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருமண்டங்குடியிலுள்ள தனியார் சர்க்கரை ஆலைகளில் 2013-2014 முதல் 2017-2018 ஆம் ஆண்டு வரை விவசாயிகளிடமிருந்து கரும்பினை கொள்முதல் செய்து, சர்க்கரை மற்றும் உபபொருட்களை உற்பத்தி செய்து, முழுவதுமாக விற்பனை செய்த வகையில், விவசாயிகளுக்கு மட்டும் பல கோடியை வழங்காமல்,விவசாயிகளை 4 ஆண்டுகளாக அலைகழித்து ஏமாற்றினார்கள். இதே போல், 2017 ஆம் ஆண்டு முதல் ஆலை நிறுத்தப்பட்டதால், அங்கு பணியாற்றிய 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி விட்டனர். இதனால் பணியாளர்கள் அனைவரும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
கரும்பு விவசாயி ஒருவரிடம் மட்டும் சுமார் 25 லட்சம் வரை பணம் நிலுவையிலுள்ளது. இதே போல் சுமார் 2 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வரை பணம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளனர். மேலும் கார்பரேசன், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளில், கரும்பு விவசாயிகளிடம், நிலுவை தொகை வழங்குவதாக கூறி, 213 கரும்பு விவசாயிகளின் பெயரில், கரும்பு விவசாயிகளுக்கு தெரியாமல் 46,88,99,205 வரை பணம் பெற்றுள்ளனர்.
வங்கி அதிகாரிகள், கரும்பு விவசாயிகளிடம் பணத்தை திருப்பு செலுத்த கூறி நெருக்கடி தருகிறார்கள். இதனால் வங்கிகளில் கடன், நகைகளை அடமானம் வைக்க முடியாமல் தவித்து வருகின்றார்கள். இது குறித்து ஆலையின் மேலாண் இயக்குனரிடம், கரும்பு விவசாயிகள், நேரிடையாக சென்று கரும்பிற்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும் என்று கேட்டதற்கு, என்னால் முடியாது, கோர்ட்டில் பார்த்து கொள்ளுங்கள் என பதில் கூறி அனுப்பி விட்டார். இந்நிலையில், ஆலைக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை நிலுவைத்தொகை பெறாமல் உள்ள விவசாயிகள் கையகப்படுத்தி, விவசாயம் செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில், சருக்கை, குடிகாடு, புத்துார், மேட்டுத்தெரு, உம்பளாப்பாடி, கபிஸ்தலம், இளங்கார்குடி, பாபாநாசம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமத்திலுள்ள கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நிலுவைத்தொகையினை வழங்க கோரி, பாபநாசம் தாலுக்காவிலுள்ள வடசருக்கை கிராமத்திலுள்ள 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் போராட்டம் நடைபெற்றது.
வடசருக்கை கிராமத்தின் முகப்பிலிருந்து கரும்பு விவசாயிகள், பெண் விவசாயிகள், 50 க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன், ஆலை நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டபடி, ஊர்வலமாக வந்தனர். பின்னர், ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை, உழுதனர். தொடர்ந்து பெண் விவசாயிகள், அங்குள்ள மரம் செடி, கொடிகளை அகற்றி சுத்தப்படுத்தி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் மதுசூதனன் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கரும்பு விவசாயிகள், பல கோடி நிலுவைதொகையை கேட்டு பல வருடமாக போராடி வருகின்றோம். வங்கிகளில், விவசாயிகளை ஏமாற்றி கையெழுத்து பெற்று கொண்டு, பல கோடி ரூபாய் வாங்கியுள்ளதால், நாங்கள் எந்த வங்கியிலும் கடன் பெறவும், நகைகளை அடமானம் வைக்க முடியவில்லை. இது போன்ற நிலையால், தற்கொலை செய்து கொள்வது தான் முடிவு. நாங்கள் நிலத்தை கையகப்படுத்தி, கரும்பு விவசாயிகளே, விவசாயம் செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை. எனவே, நிலத்தை விட்டுவெளியேற மாட்டோம் என முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அதிகாரிகள், வரும் 15 நாட்களுக்குள், ஆர்டிஒ தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக தீர்வு காணப்படும் என்ற அறிவித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி கூறுகையில், கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நிலுவைத்தொகை வழங்காமலும், விவசாயிகளை ஏமாற்றி கையெழுத்து பெற்று கொண்டு பல கோடி ரூபாய் பணத்தை, ஆலை நிர்வாகத்தினர் பெற்றுள்ளனர். இதனால் விவசாயிகள் அனைவரும் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றோம். பல ஆண்டுகளாக எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினையும், வங்கியில் எங்கள் பெயரில் கடன் வாங்கியுள்ளதால், வங்கி அதிகாரிகள் நெருக்கடி தருகிறார்கள். இதனால் விவசாயியான எங்களுக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையினை வழங்காததால், ஆலை நிர்வாகத்தின் நிலத்தை கையகப்படுத்தும் போராட்டம் செய்தோம். ஆனால் வட்டாட்சியர் மற்றும் போலீசார், 15 நாட்களுக்குள் ஆர்டிஒ தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி, உடன்பாடு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
கரும்பு விவசாயியான எங்கள் அனைவருக்கும், நிலுவைத்தொகை மற்றும் எங்கள் மீது வங்கியில் வாங்கிய கடன் தொகை குறித்து, சுமூக தீர்வு காணாவிட்டால், 15 க்கும் மேற்பட்ட கிராமத்திலுள்ள கரும்பு விவசாயிகள் அனைவரும், காலவரையன்றி, அந்தந்த கிராமங்களின் முக்கிய சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.