தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினைக்கு தீர்வு காணாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பும் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வேளாண் இணை இயக்குநர் நல்லராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், விவசாயிகள் அனைவரும் எழுந்து, கடந்த 59 நாட்களாக திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், நிலுவைத் தொகையை கேட்டும் கரும்பு விவசாயிகள் ஆலை முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைத்துவிட்டு பின்னர் ஆலையை மற்றவரிடம் விற்கலாம் என மாவட்ட நிர்வாகம் யோசனையை வழங்கவில்லை.

தொடக்கத்திலிருந்து அப்பகுதி கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்க மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை, போராட்டம் நடத்தும் விவசாயிகளை அடிமைகளாக வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்கிறது  எனக் கூறி விவசாயிகள் கருப்பு துண்டு அணிந்து, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சிறிதுநேரம் கழித்து விவசாயிகள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறி, மாவட்ட நிர்வாகத்தையும், கால்ஸ் நிறுவனத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்திலிருந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகை அனைத்தும் பெற்றுத்தரப்படும். இதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்: மாவட்டத்தில் பல இடங்களில் தாளடி நெற்பயிர் கதிர் வரும் நிலையில் உள்ளது. இந்நிலையில் வழக்கமாக (ஜன.28) மேட்டூர் அணையை மூடாமல், பிப்.15-ம் தேதி வரை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் கொள்முதல் நிலையங்களை திறந்து தேக்கமின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.

இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், மாவட்டத்தில் தேவையான அனைத்து இடங்களிலும் கொள்முதல் நிலையங்களை திறந்து, கொள்முதலை விரைவுப்படுத்த வேண்டும். இதனை நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகள் கண்காணித்து மேற்பார்வையிட வேண்டும் என்றார்.





நெல்லை கொட்டி நூதன போராட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா, தாளடியில் சுமார் 3.43 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் அறுவடைப் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 358 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, 20,193 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், போதிய அளவில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அம்மாபேட்டை அருகே விழுதியூர் ஊராட்சியில், கடந்த ஆண்டு இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டது. தற்போது, ரெங்கநாதபுரத்தில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு வாரமாக நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்துக் காத்துக்கொண்டு உள்ளனர்.

எனவே, விழுதியூரில் கூடுதலாக கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாபேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையிலான விவசாயிகள்,  நெல்லை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.