நெல் விற்பனைக்கு ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்து கைவிட வேண்டும்

  என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாலை மறியல், கொள்முதல் நிலையம் முற்றுகை, காத்திருப்பு மற்றும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் மூட்டைகளை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய கொள்முதல் நிலையங்களுக்கு வரும் முன்பாக ஆன்லைனில் பதிவு செய்த பின்பு, அவர்கள் குறிப்பிட்ட நாட்களில் நெல்லை கொண்டு வருமாறு கூறிய பின் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் புதிய நடைமுறையை ஒன்றாம் தேதி  முதல் அமலுக்கு கொண்டு வந்தனர்.




இந்த ஆன்லைன் எனும் புதிய நடைமுறைக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தாலுக்காக்களில் நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியை விவசாயிகள் புறக்கணித்தனர். இந்நிலையில் 2021-22ஆம் ஆண்டு கொள்முதல் பருவம் தொடங்கியது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய நெல்  மூட்டைகளை, கடந்த 15 நாட்களுக்கு மேலாக மலை போல் குவித்து வைத்துள்ளனர். மழை இரவு நேரங்களில் பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வந்தனர். எனவே, நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை உடனே திறந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.




இந்நிலையில், கொள் முதலுக்கான புதிய நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து, தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகத்தின் முன்பு, விவசாய சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கழுத்தில் நெல் மூட்டைகளை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தின் உள் பகுதிக்கு சென்று அங்கு தரையில் படுத்து காத்திருக்கும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது,  விவசாயிகள் ஆன்லைன் பதிவு முறையை உடனடியாக கைவிட வேண்டும். மாவட்டம் முழுவதும் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். மழை பெய்வதால் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். நெல்மூட்டைக்கு 40 லஞ்சமாக கேட்பதை கைவிட வேண்டும். ஒவ்வொரு மூட்டையும் 2 கிலோ கூடுதலாக எடை வைப்பதை தடுக்க வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பினர்.




பின்னர் துணை மேலாளர் முத்தையா, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தற்போது கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை பழைய முறைப்படி கொள்முதல் செய்யப்படும், எங்கெங்கு நெல் மூட்டைகள் உள்ளதோ அங்கு உடனடியாக திறக்கப்படும் என உத்திரவாதம் வழங்கியதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதே போல்  ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்து, பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரத்தநாட்டை அடுத்த செல்லம்பட்டி கடைவீதியில் விவசாயிகள் டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தியும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதே போல் தஞ்சாவூர் அருகே கோவிலூர் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஆன்லைன் பதிவை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுளளது.