தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் 8-வது நாளாக எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் உள்ளது திரு ஆரூரான் சர்க்கரை ஆலை. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆலை முன்பு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 30-ந் தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இதில் 2 நாட்களுக்கு முன்பு கரும்பு விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 8-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன், நாக முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.


கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள் நல்லதம்பி, அமிர்தலிங்கம், எஸ்.கே. செந்தில், மோகன்தாஸ், குணசேகர், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எருமை மாட்டிடம் மனு அளித்தனர். பின்னர் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்த்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கரும்புக்கான முழுதொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.


ஆலையை தனியாருக்கு தாரைவார்க்காமல் தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.




படகு சவாரி மீண்டும் தொடங்கப்படுமா?


தஞ்சாவூர் செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பி உள்ளதால் மீண்டும் படகு சவாரி தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பியது அதிராம்பட்டினம் அருகே செல்லிக்குறிச்சி ஏரி உள்ளது. இந்த ஏரி 5 கிலோமீட்டர் தூரமும், 320 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்த நிலையிலும் இந்த செல்லிக்குறிச்சி ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது.


கடந்த சில நாட்களாக பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகர் பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியில் படகு சவாரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. அப்போது படகில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சென்று வந்தனர். எனவே மீண்டும் படகு சவாரி அமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.