தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வரும் தருவாயில் கடல் அலையின் சீற்றத்தால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் முற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் மரக்காணத்திற்கு இடையே கரையை கடக்க என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயலின் தாக்கத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 26 மீனவ கிராமங்களிலும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலை எழுச்சியின் காரணமாக சீர்காழி தாலுக்கா தொடுவாய், மடவாமேடு, பூம்புகார், பழையார், கொட்டாய்மேடு மற்றும் தரங்கம்பாடி தாலுகா சந்திரா பாடி கிராமத்தில் கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கருங்கற்களை தாண்டி தண்ணீர் கிராமத்தில் புகுந்து வருகிறது. இந்த சூழலில் சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் கடல் அலையின் சீற்றத்தால் கடுமையாக கடல் அலைகள் சுமார் 15 அடி உயரத்திற்கு எழுந்து வருகிறது. இதன் காரணமாக தொடுவாய் கிராமத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து, சுமார் 300 மேற்பட்ட வீடுகளைச் சுற்றி கடல் நீர் சூழ்ந்துள்ளது, 100 க்கும் மேற்பட்ட வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்துள்ளது.
இதனை அடுத்து தண்ணீர் புகுந்த வீடுகளை விட்டு மீனவர்கள் குடும்பத்துடன் வெளியேறி அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டித்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்து வரும் நிலையில், இப்பகுதியை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தண்ணீர் வடிவதற்கு உண்டான நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் பெருகியதால், சந்திரபாடியில் மீனவர்கள் வசிக்கும் பகுதி முழுவதும் கடல் நீர் தேங்கி மீனவ மக்கள் கடும் அவதி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ளது சந்திரபாடி கிராமம். கடலோர கிராமமான இங்கு மீனவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினரும் வசித்து வருகின்றனர். சந்திரப்பாடியில் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு பெருகியது, இதன் காரணமாக கிராம எல்லை கோயிலான பத்திரகாளியம்மன் கோயிலையும் தாண்டி கடல்நீர் உப்புகுந்து கிட்டத்தட்ட சந்திரப்பாடி கிராமம் முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.
இதனால், கிராம மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கடல் சீற்றம் முற்றிலுமாக குறைந்தால் மட்டுமே கடல்நீர் மீண்டும் வடிய வாய்ப்புள்ளது. வருடாவருடம் இதே போல் புயல், மழை காலங்களில் கடல் நீர் உட்பகுந்து பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள், சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதியில் கடல் சிற்றத்தின்போது வருடாவருடம் கடல் நீர் உட்புகுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வாக கடல் அரிப்பை தடுக்க கருங்கற்களை கொண்டு தடுப்புச் சுவர் அமைத்து கடல்நீர் உப்புகாமல் பாதுகாக்க வேண்டும் என்ற தங்களின் 10 ஆண்டு கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து கடல் நீர் கிராமத்துக்குள் புகுந்து வருகிறது.