கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி இளைஞர் வேலை தேடி வந்துள்ளார். இவரது சமூக வலைதளத்தில் வந்த தகவல் மூலம் ஒரு பெண்ணின் தொடர்பு கிடைத்தது. தொடர்ந்து, இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது, அப்பெண்ணிடம் வேலை தேடிக் கொண்டிருப்பதாக கும்பகோணம் இளைஞர் தெரிவித்துள்ளார்.

அதற்கு அப்பெண், பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்துதான் வேலையில் சேர்ந்ததாகவும், உங்களுக்கும் வேலை வேண்டுமானால் பணம் கொடுத்தால் வாங்கி விடலாம் என்று தெரிவித்துள்ளார்

இதை நம்பிய அந்த இளைஞர் அப்பெண் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு சில தவணைகளில் ரூ. 1.84 லட்சத்தை அனுப்பி உள்ளார். தொடர்ந்து அந்த இளைஞருக்கு விமான நிலையத்தில் பணியில் சேர போலி அனுமதி கடிதம் மெயிலில் வந்தது. ஆனால் அது போலி என்று தெரியாத அந்த இளைஞர் அனுமதி கடிதத்தின் நகலை எடுத்துக் கொண்டு பெங்களூரு விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அது போலி கடிதம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்துதான் கும்பகோணம் இளைஞருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து தஞ்சாவூருக்கு திரும்பிய அவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






இரண்டு பவுன் நகை திருட்டு

தஞ்சையை அருகே தெற்கு மானோஜிபட்டி லட்சுமி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் குணசீலன் (42). சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளை சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 2 பவுன் நகைகள் இல்லாதது தெரிய வந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டை பூட்டிவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வருவதற்குள் நடந்த இந்த திருட்டு சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.