தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை தொடர் மழை பெய்தது. சனிக்கிழமை மழை குறைந்துவிட்டாலும், வானில் மேக மூட்டம் காணப்பட்டதுடன், குளிரும் அதிகமாக இருந்தது. மேலும் நேற்றும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக திருவையாறு அருகே புனவாசல், விளாங்குடி, வைத்தியநாதன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 1,000 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ இளம் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதேபோல, கும்பகோணம் அருகே வாளபுரம், ஆலமன்குறிச்சி, மேலாத்துக்குறிச்சி, ஏரகரம், அத்தியூர், கடிச்சம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 200க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலும் சம்பா, தாளடி பருவ இளம் நெற் பயிர்கள் மூழ்கின. மழை தொடர்ந்து பெய்து வந்ததால் வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம், களிமேடு உள்ளிட்ட கிராமங்களில் நேரடி விதைப்பு மூலம் பயிரிடப்பட்ட இளம் சம்பா பயிர்களும், இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்ட பயிர்களும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதேபோல, நடவு செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு உள்பட்ட பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.





சனிக்கிழமை மழை சற்று ஓய்ந்த நிலையில் வயலில் தேங்கிய தண்ணீரை வடிய வைப்பதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இருப்பினும் அன்று மாலையும், நேற்று மாலையும் மழை பெய்ததால் இப்பணிகள் பாதிக்கப்பட்டன. ஏக்கருக்கு ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை செலவு செய்துள்ள நிலையில், இந்தத் தொடர் மழையால் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இதேபோல, தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை, அய்யம்பட்டி, கும்பகோணம் அருகே அணைக்கரை உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு தயாராகிக் கொண்டிருந்த 10,000க்கும் அதிகமான செங்கரும்பு பயிர்கள் வேருடன் சாய்தது. இவற்றை மீண்டும் நிமிர்த்தி கட்டுவதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு, ஒரத்தநாடு அருகே ஊரணிபுரம் மூனுமாங்கொல்லை, பேராவூரணி அருகே அடைக்கதேவன், பாபநாசம் அருகே ஒன்பத்துவேலி, நாகலூர், அன்னப்பன்பேட்டை, திருவிடைமருதூர் அருகே நரசிம்மன்பேட்டை, பந்தநல்லூர், பாப்பாக்குடி, மேலக்காட்டூர், சரபோஜிராஜபுரம் ஆகிய பகுதிகளில் 15 கூரை வீடுகள் பகுதியாகவும், ஒரு கூரை வீடு முழுமையாகவும், ஒரு ஓட்டு வீடு பகுதியாகவும் சேதமடைந்தன. மேலும், அடைக்கதேவன் கிராமத்தில் ஒரு ஆடு இறந்தது.




சுவர் இடிந்து விழுந்து பெண் பலி:

பூதலூர் அருகே இந்தளூர் ஊராட்சிக்கு உட்பட்ட நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மனைவி செல்லபாப்பா (55). நேற்றுமுன்தினம் இரவு செல்லபாப்பா தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மண் சுவர் மற்றும் மேற்கூரை ஓடுகள் இ்டிந்து செல்லபாப்பா மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இ்டத்திலேயே உயிரிழந்தார்.

முருகையன் மற்றும் அவருடைய, மகள் பவித்ரா ஆகியோர் காயமின்றி உயிர்தப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் பூதலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்லபாப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். நடத்தி வருகிறார்கள். பலத்த மழையால் வீ்ட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தயில் சோகத்தை ஏற்படுத்தியது.