தஞ்சை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இளைய தலைமுறையினர் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி.ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்:


இளம் வயதில் பழகிக் கொள்ளும் போதைப் பழக்கங்கள் மெல்ல மெல்ல அடிமையாக்கி விடுகிறது. போதைப் பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செய்கின்றது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். போதைப் பொருட்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், சமுதாயம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என பலவகையான தீமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.


தஞ்சையில் தீவிர சோதனை:

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு இருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் திருவிடைமருதூர்  சரகம் ஐந்து தலைப்பு வாய்க்கால் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள், லாரிகள் என அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்தனர்.அப்போது கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற இரண்டு கார்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது  ஒவ்வொரு காரிலும் 22 சாக்கு பைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் ஹான்ஸ் புகையிலை உட்பட பல போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.





இதையடுத்து திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரண்டு கார்கள் மற்றும் அதில் வந்தவர்களை போலீசார் பிடித்து கொண்டு சென்றனர். பின்னர் கார்களில் வந்தவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் திருவிடைமருதூர் கரிக்குளம் குமரன் தெருவை கந்தசாமி என்பவரின் மகன் துரைசாமி (42), கும்பகோணம், துவரங்குறிச்சி புது தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (32),  கடிச்சம்பாடி கீழத்தெருவை சேர்ந்த ஞானசுந்தரம் மகன் ரஞ்சித் (25)  என்பது தெரிய வந்தது.


250 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்:




காரில் மொத்தம் 250 கிலோ போதைப்பொருட்கள் கடத்தி வந்துள்ளனர். இது கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டவை என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து திருவிடைமருதூர் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் போதைப்பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் இந்த அதிரடி வாகனச்சோதனையில் போதைப்பொருட்கள் கைப்பபற்றப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.