தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை மாநகராட்சி சார்பில் நாடக போட்டி தஞ்சையில் 12 நாட்கள் நடைபெற்றது. காவேரி அன்னை கலைமன்றம் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் வரலாற்று நாடகம், புராண நாடகம், சமூக நாடகம், நாட்டிய நாடகம் ஆகியவை இடம் பெற்றன. இந்த நாடக கலை விழா மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெற்றது.
12 நாட்கள் நடந்த இந்த போட்டியில் 32 நாடகங்கள் இடம் பெற்றன. பல்வேறு தலைப்புகளில் நடந்த இந்த நாடகப் போட்டியில் சமூகம், கலை மற்றும் விழிப்புணர்வு குறித்த நாடகங்கள் இடம் பெற்றன. இதில் சிறந்த நாடகமாக காரைக்கால் கலைக்கோவில் நாடக மன்றத்தின் தெய்வ நிந்தனை சமூக நாடகம் முதல் பரிசை பெற்றது.
மேலும் புதுச்சேரி கலைச்சித்ரா கலைக்குழுவின் தேசத்தின் நிறம் சிவப்பு என்ற சமூக நாடகமும், கோவை கலாலயம் வழங்கிய யார் அவள் என்ற சமூக நாடகம் 2 மற்றும் 3-ம் பரிசை பெற்றன. புராணம், வரலாறு இவற்றில் முதல் பரிசை தஞ்சை சோழன் நாடக மன்றம் வழங்கிய வஞ்சகன் என்ற நாடகம் பெற்றது.
இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில் கலைமாமணி விருது பெற்ற காவேரி அன்னை கலை மன்ற நிறுவனர் முத்துவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, 3 மாநில கலைஞர்கள் சார்பில் வெள்ளி செங்கோலும் வழங்கப்பட்டது. விழாவில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார். வக்கீல் எஸ்.எஸ்.ராஜ்குமார் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
இதில் காவேரி அன்னை கலைமன்ற நிர்வாகிகள், நாடக நடிகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வீரத்தமிழமுதன் நன்றி கூறினார். போன்ற நாடக கலை விழாக்கள் நடத்தப்படுவதால் நலிவடைந்த நிலையில் உள்ள நாடக கலைஞர்கள் குறித்தும் நாடகத்தின் பாரம்பரியம் குறிக்கும் பொதுமக்கள் அறிந்து கொள்ள பெரும் வாய்ப்பாக அமையும். இதை ஆண்டுதோறும் நடத்தாமல் மாதம் ஒருமுறை கலை விழாவாக நடத்தினால் மக்கள் மத்தியில் நாடகம் கலைஞர்களின் சிரமங்கள் உணர்த்தப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
கிராமப்புறங்களில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த நாடகங்கள் தற்போது அழியும் நிலையில் உள்ளது. இதை மீட்டெடுக்கும் முயற்சியாக மாவட்ட தலைநகரங்களில் மாதம் ஒருமுறை நாடக கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடகத்தின் பெருமையை இக்காலத் தலைமுறையினரும் அறிந்து கொள்ள இயலும். நம் சரித்திரங்களை நாடகங்கள் வாயிலாக தான் நாடகக் கலைஞர்கள் கொண்டு வந்தனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்