தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரை கண்டித்து நாளை 9ம் தேதி உண்ணாவிரதம் நடக்கவிருக்கிறது என்று வாட்ஸ் அப்பில் பரவிய போஸ்டர் கட்சிக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அதிராம்பட்டினம் நகராட்சி. பேரூராட்சியாக இருந்த அதிராம்பட்டினம் நகராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 27 வாா்டுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தை ஒரு உலுக்கு உலுக்கி உள்ளது வாட்ஸ் அப் உட்பட சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு போஸ்டர். அப்படி என்னங்க அந்த போஸ்டரில் உள்ளது. இதுதாங்க அந்த போஸ்டரில் உள்ள விஷயம்.


ஒரு தலைபட்சமாக செயல்படும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அண்ணாத்துரையை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் என்ற தலைப்புடன் அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. திமுக மாவட்ட செயலாளரை கண்டித்து திமுகவினரே உண்ணாவிரதமா என்று பார்த்தால் அந்த போஸ்டரில் பெயர் எல்லாம் இல்லை. அதிரை மேற்கு பொதுக்குழு உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர்கள், பாகநிலை முகவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழகத் தொண்டர்கள், அதிராம்பட்டினம் என்று உள்ளது, இப்படி ஒரு போஸ்டர் என்றால், இன்னொரு போஸ்டரில் மேற்கண்ட வாசகங்களுடன் நாள்: 9.11.2024, சனிக்கிழமை காலை 10.00 மணி, இடம்: பேருந்து நிலையம், அதிராம்பட்டினம் என்று கூடுதல் தகவலுடன் இவண்...மேற்கு நகர பொறுப்புக்குழு, மேற்கு நகர வார்டு செயலாளர்கள், கழக நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர கழக உடன்பிறப்புகள் என்று உள்ளது. 




சமூக வலைதளங்களில் மட்டுமே இந்த போஸ்டர்கள் உலா வருகிறது. அதிராம்பட்டினத்தில் எந்த இடத்திலும் இந்த போஸ்டர் ஒட்டப்படவில்லையாம். 


ஒரே கட்சிக்குள் இப்படி என்ன மோதல். உண்ணாவிரதம் நடக்க இருக்கிறதா என்று போலீசார் தரப்பில் விசாரித்தபோது உண்ணாவிரதம் என்றால் அதற்கு நிச்சயம் காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இதுவரை அப்படி எவ்வித அனுமதியும் கேட்டு யாரும் அணுகவில்லை என்று தெரிவித்தனர்.


திமுக கட்சி வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது, மாவட்ட செயலாளர் அண்ணாத்துரைக்கு அதிராம்பட்டினம் பகுதியில் எதிர்ப்புகள் இருப்பது உண்மைதான். ஆனால் உண்ணாவிரதம் என்று உலா வரும் போஸ்டர்கள் பற்றி தெரியலைங்க என்று தெரிவித்தனர். அப்போ இதை செய்தது யார் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல் ஏதோ... இருக்கு. அதுதான் இப்போ புகையுது. நிச்சயம் ஒரு நாள் வெடிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.