தஞ்சாவூர்: தஞ்சாவூர் பூச்சந்தை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்றிரவு நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 


சூரனை கந்தன் வதம் செய்த நாளையே சஷ்டி என்கிறோம்.. சூரபத்மனை அழிப்பதற்காக நடைபெறும் போர் இதுவாகும். கொடியவனான அசுரனை வதைக்க முருகனுக்கு மனமில்லை என்பதால் வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். அதன்படி, தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்கும்படி சூரனிடம் அறிவரை சொன்னார் வீரபாகு. ஆனால், சூரன் அதை பொருட்படுத்தவில்லை. எல்லாரையுமே அழிக்க துடித்தான்.. இறுதியில், மாயப்போர் முறைகளை கையில் எடுத்தான்.




ஆனால், அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று இதற்கு அர்த்தம் இல்லை. சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார் முருகன். இந்த நிகழ்ச்சி சூரசம்ஹாரம் ஆகும். தஞ்சாவூர் பூச்சந்தை சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


தஞ்சாவூர் பூக்காரத் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பழமையானது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி பெருவிழாவின் போது சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு கடந்த 2ம் தேதி  கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மான், பூத, யானை வாகனங்களின் தினமும் சுப்பிரமணியசுவாமி வீதியுலா நடைபெற்றது.


கடந்த 6 ம் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான நேற்று இரவு 7 மணியளவில் ஆடு, மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பட்டு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.


தொடர்ந்து இன்று (நவ.8ம் தேதி) திருக்கல்யாணமும், நாளை (9-ம் தேதி) குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 11 -ம் தேதி தீர்த்தவாரியும், 12-ம் தேதி விடையாற்றியும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை உபயதாரர்களுடன் இணைந்து கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.




இதேபோல் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், நாகேஸ்வரர் கோவில், பழனிஆண்டவர் கோயில் உள்ளிட்ட கும்பகோணத்தை சுற்றியுள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.  சூரசம்ஹாரம் நிகழ்ச்சி உச்சி பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட முருகன் உச்சி பிள்ளையார் கோயில் அருகே உள்ள மும்முனை சந்திப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில் முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.


அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். இதனால் தஞ்சை மெயின் சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இதே போல் ஏரகரம் கந்தநாத சுவாமி கோயிலில் தினமும் சந்தன காப்பு அலங்காரம், புஷ்பாங்கி சேவை,வெள்ளை சாந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது. கந்த சஷ்டி விழாவான நேற்று முன்தினம் காலை ஹோமம், கடம்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை அம்மனிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மகா அபிஷேகம், தீபாராதனையும், மாலை ராஜ அலங்காரம் நடந்தது.