தஞ்சாவூர்: கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.


தண்ணீர் தேவை மிக முக்கியமானது


கோடை காலத்தில் தண்ணீர் முக்கிய தேவையான ஒன்றாகும். ஒரு பொதுவான மற்றும் அடிப்படையான விஷயம் வெயில் காலத்தில் தண்ணீர் குடிப்பது. அதாவது நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கு நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.


நீர்ச்சத்து:


நாள் ஒன்றுக்கு ஒருவர் இரண்டு அல்லது மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் தாகம் வந்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லை. அவரவரின் உடல் எடையைப் பொறுத்து தண்ணீர் அருந்த வேண்டும். தாகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு நாம் நீர் அருந்த கூடாது. இது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல. பொதுவாகவே ஒருவருக்கு அவரின் எடையை பொறுத்து நீரின் தேவை இருக்கும். கோடை காலத்தில் தாகம் இருக்கும் ஆனால் குளிர்காலத்தில் அந்த தாகமும் இருக்காது. தாகம் எடுத்தால்தான் தண்ணீர் அருந்த வேண்டும் என்றில்லை.


அதேபோல சிலர் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ், டீ, காபி, சூப்,போன்ற பானங்களை அருந்தினால் நீர்ச்சத்தை அதிகப்படுத்தலாம் என நினைப்பார்கள். அது தவறான ஒன்று. நீர்ச்சத்தை சரியாக பேணுவதற்கு நீரை தவிர்த்து வேறொரு அற்புத பானம் இல்லை. போதுமான தண்ணீர் குடித்துவிட்டு, கூடுதலாக மோர், எலுமிச்சை பழச்சாறு, பழங்கள் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம். அதிலேயும் சர்க்கரை அதிகமாக இருந்தால் அது அதிக பலனைக் கொடுக்காது. எனவே தண்ணீரை கொண்டே நீர்ச்சத்து தேவையை பூர்த்தி செய்து விடலாம்.




தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்


இப்படி முக்கிய தேவையான ஒன்றாக அதுவும் கோடைகாலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய தேவையானது என்றால் அது குடிநீர்தான். அதேபோல் தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. தஞ்சை மாநகராட்சியில் தண்ணீர் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


கவனத்துடன் தண்ணீரை செலவழியுங்கள்


பாத்திரங்களை கழுவும் போது குழாயை திறந்துவிட்டு பயன்படுத்தாமல் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி கழுவலாம். பல் துலக்கும்போதும், முகம் கழுவும் போதும் குழாயை திறந்துவிட்டு பயன்படுத்தாமல், ஒரு வாளியில் நீரை நிரப்பி சிறுக சிறுக பயன்படுத்த வேண்டும். குளிக்கும்போது 'ஷவர்' பயன்படுத்தாமல் வாளியில் நீரை நிரப்பி குளிக்கலாம். துணி துவைக்கும் எந்திரங்களில் (வாஷிங் மெஷின்) அன்றாடம் துணிகளை துவைக்கும் கழுவி விடுவதற்கு முன்னர் போது கூடுதல் நீர் செலவாகும்.


அதனால், ஒரே முறையாக எல்லா துணிகளையும் துவைத்து நீரை சிக்கனப்படுத்த வேண்டும். துணி துவைத்த பிறகு மீதம் இருக்கும் நீரை வீணாக்காமல் கழிப்பறையில் ஊற்றலாம். தண்ணீர் குழாய்களை நன்றாக மூட வேண்டும். வீட்டில் எந்த இடத்திலும் குழாய்களில் நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் கசிவு இருந்தால் உடனே பழுது நீக்க வேண்டும்.


வாகனங்களை தண்ணீர் குழாய் மூலம் கழுவாமல் ஈரத்துணியை வைத்து துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். இப்படிப் பல வழிகளில் நீரைச் சேமித்தால் அது நமக்கும் நல்லது பிறருக்கும் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.