தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் பழைய மாநகராட்சி படேல் அரங்கத்தில் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது.



துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை நடந்தது. இதில் முதலில் சாதாரண கூட்டமும், தொடர்ந்து அவசர கூட்டமும் நடைபெற்றது.

மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அய்யப்பன் பேசுகையில், மாநகராட்சி பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகளுக்கு முன்பு ரூ.10 ஆக இருந்த கட்டணத்தை தற்போது மாநகர பேருந்திற்கு ரூ.10 ஆகவும், புறநகர் பேருந்துகளுக்கு ரூ.15 ஆக மட்டும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஆனால் தரைக்கடைகளுக்கு மட்டும் 150 சதவீதம் கட்டணம் அதிகரித்து வசூலிக்கப்பட்டதால் தான் பிரச்சனை ஏற்பட்டது என்று வலியுறுத்தினார்.
சாதாரண கூட்டத்தில் 22 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 16வது பொருளாக தரைக்கடைகளுக்கு தினசரி கட்டணம் வசூலிப்பது தொடர்பான தீர்மானம், கட்டணம் நிர்ணயம் செய்ய மன்றமே முடிவு செய்யலாம் என்பதில், விரைவில் தரைக்கடைக்காரர்கள் ஏற்கதக்க வகையிலும், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படாத வகையிலும் கட்டணம் நிர்ணயம் செய்வது என் முடிவு செய்யப்பட்டது.

துணை மேயர் சு.ப.தமிழழகன் (திமுக), நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரலாற்று வெற்றி பெற்றமைக்கு, அவருக்கு பாராட்டும், இதற்காக பாடுபட்ட தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்தும் மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் அய்யப்பன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு உருவ சிலை அமைக்க, நீதிமன்ற சாலை ரவுண்டானா அல்லது பழைய மீன்அங்காடி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ஒன்றில் அமைக்க மாமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வந்தார்.

தொடர்ந்து அவசரக்கூட்டம் நடைபெற்றது. இதிலும் 3 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில் மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவு பராமரிப்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியார் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள திருத்திய நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கான உத்தேச செலவினம் ஆண்டிற்கு ரூபாய் 10 கோடியே 85 லட்சத்து 88 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுநிதியில் இருந்து மேற்கொள்ள அனுமதி அளிக்கலாம் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், முன்னாள் மாமன்ற உறுப்பினர் குணசேகரன் (அதிமுக) மறைவிற்கு இரங்கல் தீர்மானத்தை திமுக மாமன்ற உறுப்பினர் குட்டி தெட்சணாமூர்த்தி கொண்டு வர, அதனை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுனம் காத்து மரியாதை செலுத்தினர்.