தஞ்சாவூர்: அன்பென்ற மழையிலே... மாற்றுத்திறனாளி குழந்தையை தாய் உள்ளத்துடன் தூக்கி கொஞ்சி ப்ரெண்ட்லியாக நடந்து கொண்ட மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. 

Continues below advertisement


2025-2026 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதை தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் தடகளம், இறகுபந்து, கபடி, அடாப்டட் வாலிபால், எறிபந்து மற்றும் சக்கர நாற்காலி மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.


இப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கு முதல் பரிசாக ரூ.3000மும், இரண்டாம் பரிசாக ரூ.2000மும். மூன்றாம் பரிசாக ரூ.1000மும் அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல், அகமது அஸ்ரப் ஜம் ஜம், மாவட்ட விளையாட்டுப் பயிற்றுநர்கள், மாற்றுத்திறனாளி பயிற்சி ஆசிரியர்கள், விளையாட்டு உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 350 ற்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.


முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்து விட்டு தனது கார் நின்ற பகுதிக்கு வந்தார் கலெக்டர் பிரியங்கா பங்கஜம். அப்போது மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் தங்களின் கோரிக்கைகளை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பரிவுடன் கேட்டு தேவையான நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அப்போது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவருக்கு அவரது தந்தை கூடுதல் சக்கரம் பொறுத்தப்பட்ட ஸ்கூட்டி கேட்டு கோரிக்கை விடுத்தார்.


அப்போது தற்போது உங்கள் மகனுக்கு லைசென்ஸ் எடுக்கும் வயதில்லை. ஆனால் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். தஞ்சாவூர் வினோத் என்பவர் தனது மாற்றுத்திறனாளி குழந்தை அகிலன் உடன் வந்து மாற்றுத்திறனாளி அட்டை வழங்க கோரிக்கை விடுத்தார். அப்போது குழந்தை அகிலை பார்த்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சட்டென்று அன்போடு தூக்கி கொஞ்சினார்.


குழந்தையை கீழே இறக்கி விடாமல் தாய் உள்ளத்தோடு கனிவாக ஹாய் அகிலன் என்று அழைத்து செல்லம் கொஞ்சிய அவர் பெற்றோரிடம் கலெக்டர் அலுவலகத்திற்கு வாருங்கள். தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தான் மாவட்ட கலெக்டர் என்றாலும் மாற்றுத்திறனாளி குழந்தையை அன்போடு அரவணைத்து தாய் உள்ளத்தோடு தூக்கி கொஞ்சி அந்த காட்சிகள் அனைவரையும் நெகிழ வைத்தது.