தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வீட்டின் சிமெண்ட் தளத்தின் உட்புறத்தில் இருந்த 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகளை அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை காப்பகத்தை சேர்ந்த உயிரின காப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தஞ்சாவூர் மாதா கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி, பத்தாவது தெருவில் வசிக்கும் கணேசன் என்பவர் தனது வீட்டு சுற்றுப்புற சுவரில் பாம்பு தென்பட்டதாக அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளைக்கு நேற்று முன்தினம் 5ம் தேதி இரவு தகவல் தெரிவித்தார். சற்று நேரத்தில் ஒன்றல்ல இரண்டு பாம்புகள் இருப்பதாக கணேசன் தெரிவித்தார். 

தொடர்ந்து காப்பக நிறுவனர் சதீஷ்குமார் ராஜேந்திரன், அன்பொளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு பாம்பை தேடி பார்த்துள்ளனர். அப்போது சுற்றுப்புறத்தின் சிமெண்ட் தரையின் அடிப்பகுதியில் காணப்பட்ட விரிசலை கண்டுபிடித்தனர். அதன் உள்ளே பாம்பு இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து அந்த சிமெண்ட் தளத்தை பாதுகாப்பாக உடைத்து பார்த்தபோது, கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் 14 எண்ணிக்கையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாம்பு குட்டிகள் அனைத்தும் சில நாட்களுக்கு முன்புதான் பிறந்தவை என்று ஆராய்ந்ததில் தெரியவந்தது. பின்னர் அவை அனைத்தும் மிகவும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டன. மேலும் அந்த இடத்தில் தாய் பாம்பின் சட்டை உரிக்கப்பட்டு கிடந்தது. பின்னர் கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் அனைத்தும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பான வனப்பகுதியில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) நிறுவனர் சதீஸ்குமார் ராஜேந்திரன் கூறுகையில், சிமெண்ட் தளத்தில் இருந்த விரிசல் உள்ளே சென்று தாய் கண்ணாடி விரியன் குட்டிகளை ஈன்று விட்டு சட்டையை உரித்து விட்டு சென்றுள்ளது. அந்த குட்டிகளில் ஒன்றிரண்டு வெளியேறி இருக்கலாம். அதை பார்த்து வீட்டு உரிமையாளர் தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்து பார்த்து விரிசல் உள்ளே பாம்பு குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இதுபோன்று உங்கள் வீடுகளில் பாம்புகள் தென்பட்டால் அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை காப்பகத்திற்கு தகவல் தெரிவியுங்கள். பாம்புகளை உயிருடன் மீட்டு பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தஞ்சை நகர் பகுதியில இவெட் அறக்கட்டளை நிர்வாகத்தினர் பல்வேறு இடங்களில் வீடுகளில் புகுந்த பாம்புகளை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதியில் விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இதேபோல் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை மீட்டனர். அந்த பாம்பு அடுத்த 2 நாளில் 22 குட்டிகளை ஈன்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.