தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையை விபத்தில்லா சாலையாக மாற்ற செயல் திட்டம் வகுக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

 

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே விபத்தில்லா சாலை பாதுகாப்பு குறித்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. 

 

இதை கொடியசைத்து தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைத்து உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக் கிளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஒரு முன்மாதிரி சாலையை ஏற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை விபத்தில்லா பகுதியாக மாற்றுவதற்காக வட்டாரப் போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி நிர்வாகம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, செயல் திட்டம் வகுக்கப்படுகிறது. இதற்காக மேம்பாலம் ரவுண்டானா முதல் பிள்ளையார்பட்டி ரவுண்டானா வரை 6.5 கி.மீ. தொலைவுக்கு சாலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

இந்தச் சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை 100 சதவீதம் அமல்படுத்துவதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, செயல்படுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து விபத்தில்லா சாலையாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



 

இதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு துறை அலுவலர்கள், பணியாளர்களுடன் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து மருத்துவக்கல்லூரி சாலையில் பொதுமக்களுக்குச் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

 

இந்தப் பேரணி பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நித்யா, நெடுஞ்சாலைத்துறை உதவிச் செயற் பொறியாளர் கீதா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாளர் தமிழ்ச்செல்வன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவர் வி. வரதராஜன், துணைத் தலைவர் எஸ். முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டியது தான் அவசியம் குறித்தும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த விழிப்புணர்வு பேரணி நடந்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.