தஞ்சையில்  தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, புதுக்கோட்டையிலும் தொடர்மழை காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மழை காரணமாக நேற்றும் தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதனிடையே, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில்  15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு, அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, குமரிக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தந்தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மண்டல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மழை வாய்ப்பு:


அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.


05.02.2023 முதல் 07.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:   


குமரிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக இன்று மீனவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


திருவாரூர் விவசாயிகள் கவலை:


திருவாரூரில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பயிர்களை அறுவடைக்கு  தயாராக வைத்திருந்த  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவாரூரில்  பால் பகுதிகளிலும்  நேற்று சற்று ஓய்ந்திருந்த  மழை இரவு முதல் மீண்டும் விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.