தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியால் சமைக்கப்பட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது. இதை பொதுமக்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், செறிவுட்டப்பட்ட அரிசியால் தயார். செய்யப்பட்ட உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர்சாதம், புளி சாதம், புதினா சாதம், சாம்பார் சாதம் ஆகிவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் செறிவுட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.




செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொதுவிநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டம் தமிழகத்தில் கடந்த 21.09.2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அறிமுகத் திட்டமாக செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்டு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு 3 நிலைகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஐனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்துள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக மத்திய அரசு தேர்வு செய்தது. இம்மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.