ஒத்த ரூபா தாங்க ஒரு சட்டை எடுத்துக்கிட்டு போங்க...என்று தீபாவளி முன்னிட்டு அறிவிப்பு வெளியிட்டு அய்யம்பேட்டையை அல்லோகலப் படுத்தியுள்ளது ஒரு ஜவுளி ஸ்டோர். சொன்னபடி ஒரு ரூபாய்க்கு சட்டையை கொடுத்தும் அசத்தியுள்ளது. இந்த ஆஃபர் முதலில் வரும் 100 பேருக்கு என்று மட்டுமே அறிவித்திருந்தாலும் வந்து குவிந்த கும்பலால் பாதுகாப்பிற்கு போலீசாரும் வர வேண்டிய நிலை ஏற்பட்டது.


விசேஷ நாட்கள் வந்தாலே ஆபர் அள்ளும். அதிரடிகள் பறக்கும். ஆளை மயக்கும். இப்போ கடை திறப்பு, ஆபர் என்றாலே ஒரு ரூபாய்தான் அனைவருக்கும் நினைவுக்கு வருது. பிரியாணி கடையில 75 காசுக்கு ஒரு பிரியாணி என்று சுதந்திர தினத்தன்று வெளியான ஆபர் அமர்க்களப்பட்டது. இப்போ தீபாவளியை ஒட்டி பெரிய பெரிய நிறுவனங்கள் இது வாங்கினா அது ப்ரீ... இதை எடுத்தா இம்புட்டு தள்ளுபடின்னு வாங்க... வாங்க என்று தங்கள் பக்கம் இழுத்துக்கிட்டு இருக்காங்க. ஆனா சைலண்டா சொன்னா சாத்தியப்படாதுன்னு அமர்க்களமா சொல்லி அய்யம்பேட்டையையே அலற விட்டு இருக்காங்க ஒரு ஜவுளி நிறுவனத்தினர்.


ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை


தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை என்று அறிவித்த ஜவுளி ஸ்டோர் நிறுவனத்தால் அந்த கடை முன்பு இரவு வெகுநேரம் காத்திருந்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் தீபாவளியை முன்னிட்டு முதலில் வரும் நூறு நபர்களுக்கு ஒரு ரூபாய்க்கு சட்டை விற்பனை என்று  மதகடி பஜாரில் உள்ள தனியார் துணி கடையில் சிறப்பு விற்பனையாக அறிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர்கள் ரம்யா, ராஜேஷ் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், "பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் வகையில் வருடந்தோறும் அனைத்து சமூக மக்களும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலங்களில் முதல் நூறு பேருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டையை விற்பனை செய்து வருகிறோம்.


இந்த சலுகை திட்டம் தொடர்ந்து செய்ய உள்ளோம். ஏழை, எளிய மக்களும் பண்டிகை காலங்களில் புத்தாடை அணிந்து கொண்டாட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்" என தெரிவித்தார்.  




ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை சிறப்பு திட்டத்தில் சட்டை வாங்க சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கடைக்கு குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரை வந்ததுதான் விஷயத்தோட ஹைலைட். சொன்னபடி முதல்100 பேருக்கு 1 ரூபாய் வாங்கிக்கிட்டு சட்டையை கொடுத்தனர். வாங்கியவர்கள் முகத்தில் வெற்றிக் கோப்பையை பெற்றது போல் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. இதுகுறித்து சட்டை வாங்கியவர்கள் கூறுகையில், "இப்போ இருக்கிற பொருளாதார நிலையில ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை கிடைச்சா தீபாவளி சந்தோஷமா போகும்தானே. என்னத்தான் விளம்பரம் என்று சொன்னாலும் 100 பேருக்கு மகிழ்ச்சிதானே என்று பட்டாசை பற்ற வைத்தால் எப்படி வெடிக்குமோ அப்படி ஒரு மகிழ்ச்சியோடு" கூறினார்கள்.