தஞ்சையில் கடந்த ஞாயிறன்று இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இதுகுறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி கடந்த 18ம் தேதி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் பகுதியில் சென்ற இந்த காரும், தஞ்சாவூரிலிருந்து ஊரணிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில், ஊரணிபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த திமுக சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் சேட் முகமது (65), ஊரணிபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த திமுக நகரச் செயலர் சஞ்சய் காந்தி (45) ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஊரணிபுரம் புது விடுதியைச் சேர்ந்த சுந்தர் (50) விபத்து நடந்த அன்று இரவு உயிரிழந்தார். மேலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஊரணிபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த ராஜா (42), காமராஜ் நகரைச் சேர்ந்த ரமேஷ் (40), மற்றொரு காரில் வந்த டிரைவர் மன்னார்குடி மேலவாசல் சோழன் நகரைச் சேர்ந்த சிவபுண்ணியம் மகன் கௌதமன் (36)  ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. கடந்த ஞாயிறன்று இந்த விபத்து தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களில் ராஜா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





மற்றொரு விபத்து சம்பவத்தில் பெண் பலி:

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மனைவி சுவாதி (40). இவர்களுடைய மகன் கார்த்தி (22). இந்நிலையில் சுவாதியும், கார்த்தியும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக  பைக்கில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திருமலைசமுத்திரம் அருகே  நின்று கொண்டிருந்த உறவினரை பார்த்து சுவாதி கை அசைத்துள்ளார். இதில் பைக்கில் இருந்து தவறி கார்த்தியும், சுவாமியும் சாலையில் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த சுவாதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற‌னர். ஆனால் செல்லும் வழியிலேயே சுவாதி இறந்து விட்டார்.

இது குறித்து  சுவாதியின் கணவர் முருகன் (46)  வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.