கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. பாசன வாய்க்காலை தூர்வாராதது இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாலடி என மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் ஒரு போக சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் மீண்டும் 3 போக சாகுபடி பணிகளை டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு 25 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணை மே மாதம் 24 ஆம் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மீண்டும் மூன்று போக சாகுபடி பணிகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளிலும் அதே போன்று தற்போது வரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கானூர், கல்லிக்குடி, தென்ஓடாச்சேரி, பாலியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக கானூர் பாசன வாய்க்காலை தூர்வாராததே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து விவசாய நிலத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 8422 ஹெக்டர் பரப்பளவில் குறுவை நெல் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. மேலும் 52 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் இதுவரை அறுவடை செய்யாமல் உள்ள நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக கூத்தாநல்லூர், மன்னார்குடி ,நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர்களும் மழை நீரில் சாய்ந்து உள்ளன. தற்பொழுது மழை நீரை வடிய வைத்தால் மட்டுமே அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்மணிகளை எந்த ஒரு காரணமும் சொல்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.