தஞ்சாவூர்: செல்போனில் பலரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் போன்று பேசி பணம் பறித்தது தொடர்பான சைபர் குற்ற வழக்கில் இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் ராஜா. இவரது செல்போனுக்கு புதிய எண்ணிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 2024 ம் ஆண்டு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர், தான் தல்லாக்குளம் போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து தங்களது உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்கள், வீடியோக்களை கைப்பற்றியுள்ளோம். அவற்றை சைபர் குற்றப் பிரிவில் கொடுத்து அழிக்க வேண்டும். அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார். இதை நம்பிய ராஜா அந்த மர்ம நபருக்கு இணையவழி மூலம் ரூ. 7 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் இது தன்னிடம் பணம் பறித்த நடத்தப்பட்ட மோசடி என்பதை அறிந்த ராஜா தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் சைபர் குற்றக் காவல் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இன்ஸ்பெக்டர் போல் பேசியவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள கோஸ்கோட் பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற சைபர் க்ரைம் போலீசார் இன்ஸ்பெக்டராக பேசி மோசடி செய்த தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த பாண்டிய பிரகாசை (35) கடந்த ஜனவரி 23ம் தேதி கைது செய்தனர்.
விசாரணையில், இதுபோல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலரிடம் பாண்டிய பிரகாஷ் மோசடியாக பேசி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நடுவர் எஸ்.டி. கனிமொழி விசாரித்து பாண்டிய பிரகாசுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மாமனாரை கொலை செய்த மருமகன் உட்பட 2 பேருக்கு ஆயுள்
மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் உள்பட 2 பேருக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ. மனோகரன் (71). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மூத்த மகள் மனோ ரம்யா. இவரும், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த ஜி. ராஜ்குமாரும் (44) என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து மனோ ரம்யா தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இதுதொடர்பான பிரச்னை குறித்து பேச ராஜ்குமார், தனது உறவினரான அவினாசி காரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த எம். சரவணகுமாருடன் (26) சேர்ந்து தனது மாமனார் மனோகரன் வீட்டுக்கு கடந்த 16.5.2024ம் தேதி சென்றார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனோகரனை கத்தியால் குத்தி ராஜ்குமார் கொலை செய்தார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ராஜ்குமார், சரவணகுமார் இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து ராஜ்குமார், சரவணகுமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய மருத்துவக்கல்லூரி காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் நசீர், தற்போதைய ஆய்வாளர் வி. சந்திரா, நீதிமன்றக் காவலர் தெய்வகுமார், அரசு வகீல் ரஞ்சித் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் வெகுவாக பாராட்டினார்.