தஞ்சாவூர்: தஞ்சையில் பெண் தொழிலதிபரை தாக்கி கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பல் தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கியது. அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டது. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட வாகனத்தை கல்லணைக்கால்வாயில் தள்ளியதும் தெரிய வந்து போலீசார் மீட்டனர். 


தஞ்சையை சேர்ந்த பிரபல பெண் தொழிலதிபர்


தஞ்சாவூர், அருளானந்த நகரை சேர்ந்தவர் சேதுக்கரசி (70). பிரபல தொழிலதிபர். இவர் கடந்த ஆக்ஸ்ட் 16ம் தேதி நள்ளிரவு வீட்டின் மாடி  அறையில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் வீட்டின் முன் பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். கதவு உடைக்கப்படும் சப்தம் கேட்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த சேதுக்கரசியை துணியால் முகத்தைக் கட்டி அவரை இரும்பு ராடால் தாக்கி விட்டு, அவரிடம் இருந்த ஒன்பது பவுன் தங்க நகைகள், தலா இரண்டு வைரக் காப்புகள், வைர மோதிரங்கள், தோடுகள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 




தனிப்படை போலீசார் தீவிர விசாரணை


இதையடுத்து தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் டவுன் டி.எஸ்.பி., சோமசுந்தரம் மேற்பார்வையில், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில், சப் – இன்ஸ்பெக்டர் தென்னரசு உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் களத்தில் இறங்கினர். தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படை போலீசார் நகர்புறத்திலும், நகரை சுற்றியும் சுமார் 500க்கும் அதிகமான சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். 


சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்து விசாரணை


இதில் கிடைத்த பல்வேறு காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள அருந்தவபுரத்தை சேர்ந்த ராஜா (40), சூரக்கோட்டையைச் சேர்ந்த எல். பாலமுருகன் (34), பி. பாலமுருகன் (24), கபினேஷ் (31), திருவாரூர் மாவட்டம், வடுவூரைச் சேர்ந்த முத்துஆனந்த் (34), புதுச்சேரி குமந்தன் மேடைச் சேர்ந்த  பிரபாகரன் (36), ஆகிய ஆறு பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.


ரூ.20 லட்சம் மதிப்பு வைர, தங்க நகைகள் மீட்பு


இதில் தஞ்சாவூர் தாலுகா, தெற்கு, மருத்துவக்கல்லுாரி, வல்லம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 20க்கும் அதிகமான வீடுகளில் பூட்டை உடைத்து திருடியதும், தொழிலதிபர் சேதுக்கரசி வீட்டில் கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளையர்களிடம் இருந்து சுமார்  ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வெள்ளிப்பொருள்கள் மீட்கப்பட்டன.


மேலும், சேதுக்கரசி வீட்டில் கொள்ளையடித்த பின்னர் அந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய ஸ்கூட்டியை கல்லணை கால்வாய் ஆற்றில் தள்ளிவிட்டு சென்றதும் தெரிய வந்தது தொடர்ந்து போலீசார் கொள்ளையர்கள் அடையாளம் காட்டிய பகுதியில் கல்லணைக்காய்வாயில் இறங்கி தேடுதல் வேட்டை நடத்தி அந்த ஸ்கூட்டியை மீட்டனர்.


டவுன் டிஎஸ்பி விடுத்த எச்சரிக்கை
 


இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி., சோமசுந்தரம் கூறியதாவது: சேதுக்கரசி வீட்டில் தனியாக இருந்த போது, அவரது வீட்டில் திருட திட்டமிட்டு இருவர் சென்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு சேதுக்கரசி வந்த போது, அவரை தாக்கி நகையை திருடியுள்ளனர். மேலும், சேதுக்கரசி மூச்சு இல்லாமல் கிடந்ததை இறந்து விட்டதாக எண்ணி தடயங்களை அழிக்க ஸ்கூட்டியை ஆற்றில் வீசியுள்ளனர். ஆள் இல்லாத வீடுகளை கண்காணித்து திட்டமிட்டு திருடுவதை வேலையாக வைத்துள்ளனர். இதுபோன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து இந்த வழக்கில் விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட டவுன் டிஎஸ்பி., சோமசுந்தரம் மற்றும் தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் பாராட்டினார்.


தஞ்சை போலீசார் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ரவுடியிசம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் கொள்ளையர்களை பிடித்து அதிரடி காட்டி வருகின்றனர். இதற்காக போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.