தஞ்சை மக்களை அலற விடும் அதிகாலை திருடர்கள்: அதிர்ச்சியில் மக்கள்

கல்லாவில் வைத்திருந்த ரூ. 84,000 மற்றும் ரூ. 7 ஆயிரம் மதிப்பு செல்போன் உதிரி பாகங்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அருகில் சூப்பர் மார்க்கெட் உட்பட 4 கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே செல்போன் கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பு செல்போன் உதிரி பாகங்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அருகில் இருந்த  3 கடைகளின் பூட்டுக்களும் உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் விளார் ரோடு சண்முகநாதன் நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பாலமுருகன் (37). இவர் காயிதே மில்லத் நகர் 13வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இரவு பாலமுருகன் தனது செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.


மறுநாள் கடையை திறக்க வந்த பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார். அவரது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடன் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ. 84,000 ரொக்கம் மற்றும் ரூ. 7 ஆயிரம் மதிப்பு செல்போன் உதிரி பாகங்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இவரது கடைக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் உட்பட 4 கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு பாலமுருகன் தகவல் தெரிவித்தார். உடன் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகையில் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில் பக்கத்து கடை உரிமையாளர்களும் தகவல் தெரிந்து விரைந்து வந்தனர். போலீஸ் மோப்பநாயும் அழைத்து வரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பாலமுருகன் கடைக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ரூ.23 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டது தெரியவந்தது. மற்ற கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் எவ்வித திருட்டும் நடக்கவில்லை. பாலமுருகன் மற்றும் சூப்பர் மார்க்கெட் என இரு கடைகளிலும் இருந்து ரொக்கம் ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாலமுருகன் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரத்தில ;நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் 2 மர்ம நபர்கள் தொடர்ந்து 5 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. அதிகாலை வேளையில் இந்த சம்பவங்கள் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்த 10 நாட்களுக்கு திருட்டு சம்பவங்கள் நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Continues below advertisement