உள்ளூரில் விலை போகாதவர்... அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் செய்தது யாரை?
பிரசாந்த் கிஷோர் பீகாரில் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்கவில்லை. ஆனால் அவர் இங்கு வந்து தேர்தல் வியூகம் கூறுகிறார் என்றால் எந்த அளவுக்கு அவர்களது வெற்றி இருக்கும்.

தஞ்சாவூர்: உள்ளூரில் விலை போகாதவரை அழைத்து வந்துள்ளனர் என்று பிரசாந்த் கிஷோர் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் செய்துள்ளார்.
திருச்சி மத்திய வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய போது கூறியதாவது:

ஒரு பரபரப்பான செய்தியை சொன்னார்கள். விஜய் கட்சி தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் சேரப் போகிறார் என சொன்னார்கள். உள்ளூரில் விலை போகாத பிரசாந்த் கிஷோரை வரவழைத்துள்ளார். பிரசாந்த் கிஷோர் பீகாரில் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்கவில்லை. ஆனால் அவர் இங்கு வந்து தேர்தல் வியூகம் கூறுகிறார் என்றால் எந்த அளவுக்கு அவர்களது வெற்றி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார். அவரை எப்படி எதிர்கொள்வது என்பது தமிழக முதல்வருக்கு தெரியும். தமிழக முதல்வர் திமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன் , பழனியாண்டி , சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் , கதிரவன் , திமுக மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஐபாக் நிறுவனத்தின் மூலம், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து தருபவர் பிரசாந்த் கிஷோர். 2021-ம் ஆண்டுக்குப் பிறகு, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடவில்லை. ஆனால், தவெக-வை தொடங்கிய பின்னர், விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பாகவே, அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்திக்க, பிரசாந்த் கிஷோர் நேரம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்தச் சந்திப்பு நடைபெறவில்ல.
இந்நிலையில், விசிக-வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா அண்மையில் தவெக-வில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, ஜான் ஆரோக்கியசாமி, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
புதிய கட்சியாக இருந்தாலும் த.வெ.க-வுக்கு மிகப் பெரிய தொண்டர்கள் பலம் உள்ளது. இதனை தேர்தல் ரீதியாக பலப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. த.வெ.க. மீது நம்பிக்கை இருப்பதால் நேரடியாக விஜய்யை சந்திப்பதற்கு பிரசாந்த் கிஷோர் வந்துள்ளார்" என்கின்றனர்.
த.வெ.க-வின் தேர்தல் வியூக சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் தவெக தலைமை இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு அரசியல் அரங்கில் பேசும் பொருளாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.