தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தை பகுதியில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இந்த கொலை முன்விரோதத்தால் நடந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
தஞ்சை கரந்தை பகுதியில் ரவுடி வெட்டிக் கொலை
தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் மகன் அறிவழகன் (35). மீன் வியாபாரி. போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது கொலை, அடிதடி, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் அறிவழகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அறிவழகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முன்விரோதத்தில் நடந்த கொலை சம்பவம்
இதுதொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், அறிவழகனுக்கும், கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் திவாகருக்கும் (30) முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அறிவழகனும், திவாகரும் தனித்தனி வழக்கு தொடர்பாக புதன்கிழமை ஆஜராகினர்.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், அறிவழகன் தனது நண்பர்கள் மகேந்திரன், சுரேஷ், ஆனந்த் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டு இருந்தபோது அங்கு திவாகர் மற்றும் சிலர் வந்து அறிவழகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
மூன்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
இந்நிலையில் தலைமறைவான திவாகர் மற்றும் அவரது நண்பர்கள் கந்தவேல், செல்வகுமார், பரத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். மேலும் தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் டவுன் டி.எஸ்.பி., சோமசுந்தரம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசன், அருள், டேவிட் தலைமையில் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது கொலையாளிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.