தஞ்சாவூர்: தூய்மை பணியாளர்களின் கோரிக்கை மீது விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை மாநகராட்சியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்க குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி அதற்கு தீர்வு காண வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.
இதையடுத்து தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிக்கொணர்வு தூய்மை பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் கண்ணன் தலைமை வகித்தார். மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 5-வது கோட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 14 கோட்டங்களிலும் தூய்மை பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கு தகுந்த கல்வித்தகுதிக்கு ஏற்பட உரிய வேலை வாய்ப்பு, தாட்கோ, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும்.
தூய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்விக்கடன், தொழில்கடன் தாட்கோ மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் தஞ்சை மாநகராட்சியில் உள்ள 14 கோட்டங்களிலும் தூய்மை பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.
சென்னையில் தூய்மைப்பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்து போராட்டம் நடத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பின்னர் நள்ளிரவில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்திய இடத்திலிருந்து அகற்றப்பட்டது பெரும் விவாத பொருளாக மாறியது. பின்னர் மறுநாள் காலை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஆறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது ஏற்படும் தொழில்சார்ந்த நோய்களைக் கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் தனித் திட்டம் நிறைவேற்றப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் தற்போது நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியுடன் கூடுதலாக 5 லட்ச ரூபாய்க்கு காப்பீடு இலவசமாக ஏற்படுத்தித் தரப்படும்.
தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுய தொழில் தொடங்கும்போது அத்தொழிலுக்கான திட்ட மதிப்பீட்டில் 35% தொகை மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 3,50,000 வரை இந்த மானியம் வழங்கப்படும்.
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு, 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த நகராட்சி, மாநகராட்சிகளின் மூலம் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்க குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.