தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 14 துப்புரவுக் கோட்டங்களில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி ஆய்வு மேற்கொண்ட போது கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டதால் கட்டிடத்தின் உரிமையாளருக்கு பொது சுகாதார சட்டத்தின்படி நோட்டீஸ் அனுப்பி மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


மாநகர்நல அலுவலர் நேரடி ஆய்வு


தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பொது சுகாதார பிரிவு 14 துப்புரவு கோட்டங்களிலும் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி டெங்கு கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியை மாநகர்நல அலுவலர் டாக்டர் வீ.சி. சுபாஷ்காந்தி வார்டு எண் 29க்கு உட்பட்ட மகர்நோம்புச்சாவடி மிஷன் மேட்டுத்தெரு பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள தண்ணீர் நிரப்பும் டிரம்களில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டது.




கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ்


இதையடுத்து தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்களில் மற்றும் கலன்களில் தண்ணீர் நிரப்பி வைப்பது, டயர்கள், டீ கப்புகள், கொட்டாங்குச்சிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்கி முட்டையிட்டு, அதிலிருந்து உருவாகும் கொசுக்கள் டெங்கு காய்ச்சலைப் பரப்புகின்றன. 


டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழுக்கள்


வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமலும் அதற்கு கட்டிடத்தின் அருகாமையில் தேங்காய் ஓடுகள், உரல்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உபயோகமற்ற டயர்கள் ஆகியவற்றை அகற்றி வேண்டும். செடிகள் வளர்க்கும் தொட்டிகளில் நீர் தேங்கி நிற்காமல் பராமரிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஸ் கொசு சாக்கடை நீரில் வளராது. தூய தண்ணீரில் மட்டுமே வளரும். இக்கொசு பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். வீட்டின் உட்புறங்களில் உள்ள பிரிட்ஜ் டிரேயில் இருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசு முட்டையிட்டு கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சமையல் மற்றும் குடிநீருக்கு பிடித்து வைக்கப்படும் தண்ணீரின் கலன்களை மூடி வைத்து பராமரிக்க வேண்டும். அதனை அடிக்கடி மாற்றவும் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சுத்தமாக பராமரிக்க வேண்டும்


வீடுகளில் வளர்க்கப்படும் மணி பிளான்ட் செடிகளில் தண்ணீர் ஊற்றி வளர விடுகிறோம், அந்த தண்ணீரில் இந்த கொசு வளரும் வாய்ப்பு உள்ளது. ஏர்கூலர் தண்ணீரில் இந்த கொசு வளரும் வாய்ப்புள்ளது. எனவே ஏர்கூலர் இருக்கும் அறைகளில் கொசு முட்டை நிச்சயம் இருக்க வாய்ப்புள்ளது. மழைகாலங்களில் ஏர்கூலரை அடிக்கடி துடைத்து தண்ணீரை மாற்ற வேண்டும். வீட்டின் அருகாமையில் தேவையற்ற செடி, கொடிகள் புல், பூண்டுகளில் கொசுக்கள் தங்கிக் கொள்ளும் என்பதனால் அந்த இடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.


குப்பைகளை மழை நீர் வடிகால்களில் கொட்டாமலும் வடிகாலினை தேக்கமின்றி பராமரித்திடவும், கட்டிடத்தின் மேல்தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்கி நிற்காமலும் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்காமலும் பராமரிக்கவும் வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆய்வுப்பணியில் துப்புரவு அலுவலர் பெ.சீனிவாசன் சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி சுரேந்தர், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதிகளில் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டு, டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.