நாகை மாவட்டம் திருக்குவளை அருகே கீழ்குடியில் சீரான குடிநீர் வரவில்லை என கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 100க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிப்படைந்தனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் சீரான குடிநீர் வரவில்லை என கிராம மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் திருக்குவளை ஊராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் இங்குள்ள 11 மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நீர் ஏற்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நாட்களாக சரிவர தண்ணீர் வரத்து இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இவ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தண்ணீர் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். கீழ்குடி பகுதியில் தண்ணீர் சீராக வரவில்லை எனவும் குறிப்பாக கடந்த நான்கு நாட்களாக முற்றிலுமாக தண்ணீர் வரவில்லை என குற்றம் சாட்டி காலி குடங்களை சாலையின் நடுவே வைத்து கும்மி அடித்து தண்ணீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அவதிக்கு உள்ளாகினர். உடனடியாக தண்ணீர் வழங்க விட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் எனவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்குவளை போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் போராட்டம் தற்காலிகமாக செய்துவிட்டனர் .