தஞ்சாவூர்: தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த எட்டு இடங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை விரிவான அகழாய்வுப் பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.


தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேரரவைக் கூடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு என்னும் தலைப்பில் மாநிலக் கருத்தரங்கை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார். இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்  தங்கம்தென்னரசு பேசியதாவது:


முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மொழி மீதும். தமிழ் பண்பாட்டின் மீதும் கொண்டிருந்த தீராத காதலை நாம் அனைவரும் அறிவோம். தமிழ்நாட்டு வரலாற்றை இலக்கியம், கல்வெட்டு, நாணயம், மொழியியல் ஆகிய முதன்மைச் சான்றுகளை முன்னிறுத்தி அறிவியல் துணைகொண்டு தமிழ்நாட்டு வரலாற்றை, பண்பாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் தன்னிகரற்ற ஆர்வம் கொண்டிருந்தார்.


மேலும், தொல்லியல் மீது தனி கவனம் செலுத்தி அதன் வளர்ச்சிக்கும், வளமைக்கும் வழிவகுத்தார். பூம்புகாரில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ள நிதி ஒதுக்கி ஆய்வினை மேற்கொள்ள வழிவகுத்தார். இந்திய வரலாற்றில், ஒரு மாநில அரசு நிதி ஒதுக்கி ஆழ்கடல் அகழாய்வு மேற்கொண்டது மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.


முத்தமிழறிஞர் கலைஞரின் அடியொற்றி மக்கள் பணியாற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  "தமிழ் நிலமானது மிகத் தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல் பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியம்" என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றினார்கள். அதனடிப்படையில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த எட்டு இடங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை விரிவான அகழாய்வுப் பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.




தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழாய்வுகளிலும் கள ஆய்வுகளிலும் பெற்ற தரவுகளை அறிவுசார் மற்றும் அறிவியல்சார் ஆய்வுகளின் வழியாக தமிழ்நாட்டின் வளமையான வரலாற்றையும், பண்பாட்டினையும் வெளிக்கொணரத் திட்டமிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தற்பொழுது தொல்லியல் மீதான ஈடுபாடும் தன்னார்வமும் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இவற்றினை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கடமையாகும். ஆகையால், தொல்லியலாளர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் புதிய கண்டுபிடிப்புகளையும் ஆய்வினையும் பொதுத்தளத்தில் விவாதித்து தமிழ்நாட்டு வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.


முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பள்ளி மாணவர்களிடையே தொல்லியல் குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்திட மாவட்டந்தோறும் கட்டுரைப் போட்டிகளை நடத்தி வருகிறது. மேலும், அறிஞர் பெருமக்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் அண்மைக்கால கண்டுபிடிப்புகளையும் புதிய நோக்கில் எழுதப்பட்டு வருகின்ற ஆய்வுகளையும் மக்களிடையே கொண்டு செல்லவும், இவ்வாய்வுகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டின் வரலாற்றினை முழுமையாக மறுகட்டமைப்பு செய்து எழுதுவதற்கான முயற்சியாக மாநில. தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்கங்கள் நடத்திட திட்டமிடப்பட்டது.


இதில் முதற்கட்டமாக. மாநில அளவிலான கருத்தரங்கம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களில் "அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு” என்னும் தலைப்பில் நடைபெற்று வருகிறது என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்  தங்கம்தென்னரசு தெரிவித்தார்.


அமைச்சர் தங்கம் தென்னரசு இக்கருத்தரங்கினைத் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பினை நூலாகவும் வெளியிட்டுள்ளார். இந்நூலினை  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.


இந்நூலில் தமிழ் இலக்கியம், மானிடவியல், நடுகற்கள், நுண்கலை, மற்றும் கட்டடக்கலை, கல்வெட்டியல், தொல்லியல் ஆய்வுகள், கலை தொல்லியல் அகழாய்வுகள் ஆகிய தலைப்புகளின் கீழ் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மாநகராட்சி மேயர்  சண். இராமநாதன், மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி, தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம், பேராசிரியர்கள் ராஜன், செல்வகுமார் அவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.