மாணவரின் வாட்ஸ் அப் மனுவுக்கு செவி சாய்ந்து பசுமை வீடு கட்டும் திட்டம் மற்றும் தஞ்சை மதர் தெரசா பவுண்டேஷன், தனியார் பள்ளி நிர்வாகம், லயன்ஸ் கிளப் ஆகியவற்றின் கூடுதல் நிதி உதவியோடு புதிதாக வீடு கட்டிக் கொடுத்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
 
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி (47) . இவரது கணவர் இறந்து விட்டார். தனது தாயுடன் வசித்து வருகிறார். தமிழ்செல்விக்கு வேல்முருகன் (16) என்ற மகன் உள்ளார். இவர் பிளஸ்-2  முடித்துள்ளார். மேற்படிப்புக்காக தஞ்சையில் உள்ள அரசு கல்லூரியில் விண்ணப்பம் செய்துள்ளார்.


இவர்கள் வசிப்பது மண் சுவர் கொண்ட கூரை வீடு. இதுவும் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில் முற்றிலும் சேதம் அடைந்தது. பின்னர் பெய்த தொடர் மழையால் கூரை வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் மாணவர் வேல்முருகனின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் நனைந்து சேதமடைந்தன. இருப்பினும் படிப்பில் செம கட்டியான இந்த மாணவர் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடந்த பல கட்டுரை, பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளில் ஏராளமாக பரிசுகளை வென்றுள்ளார். தாய் தமிழ்செல்வி நூறுநாள் வேலை மற்றும் சாகுபடி காலங்களில் வயல் வேலைக்கு சென்று கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வருகிறது. இந்நிலையில் புதிதாக வீடு கட்ட வசதி இல்லாத நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் உதவும் மனப்பான்மையை அறிந்த மாணவர் வேல்முருகன் தங்களின் நிலை குறித்து வாட்ஸ் அப் வாயிலாக கலெக்டருக்கு ஒரு மனுவை அளித்தார். தன் படிப்பு நிலை, வாங்கிய பரிசுகள், தங்களின் வீட்டு நிலைமை குறித்து தெரிவித்து இருந்தார்.
 
இதை பரிசீலனை செய்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வடக்கூர் கிராமத்துக்கு நேரில் வந்து மாணவனின் இருப்பிடத்தை ஆய்வு செய்தார். அதில் அவர் வசித்த இடத்தின் அருகே அவர்களுக்கு சொந்தமாக சிறிய அளவில் நிலம் இருந்தது. இதில் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கலாம் என்று எண்ணிய கலெக்டர் இதற்காக மாணவர் வேல்முருகனை விண்ணப்பிக்க வைத்தார். அதன் பேரில் வீடு கட்டும் ஆணை வந்தது. அரசு சார்பில் மானியமாக ரூ.1.80 லட்சம் வீடு கட்ட கிடைத்தது. இருப்பினும் படிக்கும் மாணவருக்கு நல்லமுறையில் வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்த கலெக்டர் கூடுதல் தொகை தேவைப்பட்டதால் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்துவிடம் இதுகுறித்து தெரிவித்தார். அவரும் வீடு கட்ட மீதம் ரூ‌. 3.70 லட்சம் மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் வழங்குவதோடு வீடு முழுவதும் கட்டிக் கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். 2 மாதத்தில் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.




இதையடுத்து, மாணவர் வேல்முருகன் குடும்பத்தினருக்கான புதிய வீடு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து வீட்டை திறந்து வைத்தார். தங்களின் புதிய வீட்டில் அடி எடுத்து வைத்த வேல்முருகன் மற்றும் அவரது அம்மா, பாட்டி ஆகியோர் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது. இத்துடன் இல்லாமல் மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரி முத்து, மாணவர் வேல்முருகனுக்கு அரசு கலந்தாய்வு மூலம் தேர்வு செய்கின்ற கல்லூரிக்கு பட்டப் படிப்பிற்கான செலவினை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருக்க இடமும், படிக்க படிப்பிற்கும் உதவி செய்த கலெக்டர் மற்றும் மதர் தெரசா பவுண்டேஷனுக்கு மாணவர் வேல்முருகன் நன்றி தெரிவித்து கொண்டார்.


நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து, ஒரத்தநாடு தாசில்தார் சீமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ரகுநாதன், ஒன்றியக்குழு தலைவர் பார்வதி சிவசங்கர், ஊராட்சித் தலைவர் பாண்டியன், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமா, ராஜா, வில்வராயன்பட்டி ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர்கள் சம்பத்ராகவன், கோவிந்தராஜ், முரளி கிருஷ்ணன், தகவல் துறை அலுவலர் ஜார்ஜ், திட்ட இயக்குனர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம் , மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி, தன்னார்வ தொண்டர்கள் வினோதினி, கிறிஸ்டி, மகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.




வாழும் கடவுளாக தெரியும் கலெக்டர்:


எங்களது ஏழ்மை நிலையை அறிந்து வீடு கட்டி கொடுத்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எங்களுக்கு வாழும் கடவுளாக தெரிகிறார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளோம். நான் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று கலெக்டர் போல் அனைவருக்கும் உதவி செய்வேன். ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் அவசியமானது. இதில் எங்களுக்கு உணவு, உடை இருந்தது. ஆனால் வீடு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையை கலெக்டர் போக்கியுள்ளார். அவருக்கும், நிதி உதவி வழங்கிய மதர் தெரசா பவுண்டேஷனுக்கும் நாங்கள் காலம் முழுவதும் நன்றி கடன்பட்டுள்ளோம் என்றார் மாணவர் வேல்முருகன்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண