தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கண்ணாடி கலைப் பொருட்கள் செய்முறை பயிற்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார்.
தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கண்ணாடி கலைப்பொருட்கள்ட செய்முறை பயிற்சி நடக்கிறது. இதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
தஞ்சாவூர் கலைகளின் பெட்டகமாக சோழர்காலம் முதல் தற்போது வரை திகழ்கிறது. இயல், இசை, நாட்டியம் மற்றும் நாடகக்கலை மட்டுமின்றி கைவினை கலைப்பொருட்களும் பெருமை சேர்த்து வருகிறது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் பல கலைகள் தஞ்சைக்கு வந்தன. அதன்பின் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் மொகலாய கலைப்பாணியும், ஆங்கிலேய கலைபாணிகளும் சேர்க்கப்பட்டன. மராட்டிய மன்னர்களுள் இரண்டாம் சரபோஜியின் காலத்தில் ஓவியம் மற்றும் இதர கலைப்பொருட்கள் தயாரிப்பில் மேன்மையுற்றிருந்தன. தஞ்சையின் கலைகள், காவிரியின் கொடை என்று கூறினால் மிகையாகாது.
தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கலைகளில் கண்ணாடி கலைப் பொருட்களும் ஒன்று. பல்வேறு அளவுகளைக் கொண்ட கண்ணாடித் துண்டுகளைக் கொண்டு பலவகையான கலைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கோயில் பள்ளியறை மண்டபம், பல்லக்கு போன்ற கோவில் தொடர்பான பொருட்கள் கண்ணாடி துண்டுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து திருமண மண்டபம், வாகன அலங்காரம், பூர்ணகும்பம், அலங்காரத் தட்டு, வீடுகளில் பூஜை மண்டபம், குடம், செம்பு, கூம்பு போன்ற அலங்காரப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே அதிகமான புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் உள்ளன. இந்த கலைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது.
அழிந்து வரும் இந்த கண்ணாடி கலைப் பொருட்களுக்கு புத்துணர்வு கொடுக்கப்பட்டு மாவட்ட தொழில் மையம் மூலமாக தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும். தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய நடைபயணமும், இரண்டாவது சனிக்கிழமை பாரம்பரிய சொற்பொழிவு நிகழ்வும், மூன்றாவது சனிக்கிழமை கைவினை கலை பொருள் பயிற்சி முகாமும், நான்காவது சனிக்கிழமை கிராமிய கலை நிகழ்ச்சியும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருள் கலைஞர்கள் செல்வராஜ், வனஜா செல்வராஜ் ஆகியோர் செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கினர். இதில் ரசம் பூசப்பட்ட கண்ணாடிகள், பாரம்பரிய பச்சை மற்றும் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்ட கண்ணாடிகள், தங்கப் பட்டை, சுக்கான் தூள், புளியங்கொட்டை பசை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என்பதும் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
பங்கு பெற்ற அனைவரும் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு கண்ணாடி கலை பொருட்களை உருவாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், ஓலைச்சுவடி பாதுகாப்பாளர் முனைவர் பெருமாள், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.