தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். சங்கத் தலைவர் உள்ளிட்ட ஊழியர்கள் சங்கத்தை மூடிவிட்டு சென்றதால் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள்  ஆர்ப்பாட்டம். கும்பகோணம் அருகே சோழபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சேகர் என்பவர் உள்ளார். இச்சங்கத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.




இந்த  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்,  500 விவசாயிகள்  கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், 200 நபர்களுக்கு மட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்ற வாரம் இந்த கூட்டுறவு சங்க தலைவரிடம்  கேட்டதற்கு இவ்வாரம் கடன் தருவதாக கூறிய நிலையில்,  இந்த கூட்டுறவு சங்கத்திற்கு 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று கடன் கேட்டனர்.  விவசாயிகள் திரண்டு வந்து கடன் கேட்டதைத் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் சங்கத்தை பூட்டிவிட்டு சென்று விட்டார். இதனை தொடர்ந்து விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன் தரையில் அமர்ந்து  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




இது குறித்து விவசாயி கூறுகையில், இச்சங்கத்தில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சம்பா தாளடிநெற்பயிர் சாகுபடி செய்வதற்காக 500 விவசாயிகள் கடன்  கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கி விட்டு, மீதமுள்ள விவசாயிகளை அலைகழித்து வந்தனர். தொடர்ந்து சென்று கேட்டு வந்த நிலையில், இன்று போய் நாளை வா என்ற வார்த்தைக்கு ஏற்ப, அலுவலர்கள் கூறி வந்தனர். பின்னர். அனைத்து விவசாயிகளும் கடந்த வாரம் சென்று கேட்ட போது, இந்தவாரம் கடன் வழங்கப்படும் என்று பதில் கூறினார்கள். இதனை நம்பி விவசாயிகள் சென்று கடன் சங்கத்தில் கேட்ட போது, போதுமான நிதி இல்லை. அடுத்த வாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள், கடன் சங்கத்தின் வாயிலில் அமர்ந்து, உடனடியாக கடனை வழங்க வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனையறிந்த சங்க தலைவர் மற்றும் அலுவலர்கள், விவசாயிகளின் பிரச்சனை பெரிதாகி விடும் என்ற பயத்தில் சங்கத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். பின்னர் கடன் சங்கத்தின் தலைவர் மற்றும் அலுவலர்களை கண்டித்து கண்டன கோஷங்களிட்டோம்.


தமிழக அரசு விவசாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரம் வழங்குகிறது. அதில் எறுவு, உரம், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிடித்தம் போக, மீதம் 20 ஆயிரம் மட்டும் கிடைக்கும். தற்போது நடவு செய்வதற்காக தயார் நிலையில் உள்ளதால், கடன் கிடைக்காததால், நாற்றுக்கள் வீணாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல், தனியாரிடம் யூரியா உரம் வாங்கினால், 690 மதிப்புள்ள வேப்பம்புண்ணாக்கு வாங்கினால் தான் யூரியா கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதே போல் கடன் சங்கத்திற்கு விவசாயிகளுக்காக வழங்க வேண்டிய எறுவை வெளி நபர்களுக்கு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து விடுகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் சோழபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள கடன் கேட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும் என்றார்.