திருவாரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் விலையில்லா ஆடுகள் பெறுவதற்கு கிராமப்புறங்களில் வசித்து வரும் ஏழை பெண்கள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை அடுத்து இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2021-22 ஆம் ஆண்டிற்கு கிராமப்புறங்களில் வசிக்கும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 1000 பயனாளிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான பயனாளிகள் கீழ்க்கண்ட தகுதிகள் கொண்டிருக்க வேண்டும். ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 60 வயதுக்கு உட்பட்ட பெண்களாக இருக்க வேண்டும், கிராம பஞ்சாயத்தில் நிரந்தர முகவரி உள்ளவராக இருக்க வேண்டும், சொந்த நிலம் இருத்தல்கூடாது, தற்போது சொந்தமாக பசு மற்றும் ஆடுகள் வைத்திருத்தல் கூடாது, கால்நடை பராமரிப்பு துறையின் வேறு எந்த மாடு மற்றும் ஆடு வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றிருக்கக்கூடாது. குடும்ப உறுப்பினர்கள் எவரும் அரசு வேலையில் இருத்தல்கூடாது, மாவட்ட ஆட்சித் தலைவராக கொண்ட மாவட்ட அளவிலான குழுவினால் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகள் இறுதி செய்யப்படுவார்கள், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒருநாள் ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் பயனாளிகள் துறை சார்ந்து அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் சந்தைகளிலும் அல்லது ஆடு வளர்ப்போரிடமும் தரமான வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகளை தேர்வு செய்து வாங்க வேண்டும். பயனாளிகளுக்கு 6 முதல் 8 மாத வயதுடைய நான்கு செம்மறி அல்லது வெள்ளாடுகள் மற்றும் ஒரு கிடா வழங்கப்படும். பயனாளிகள் விருப்பப்படி 5 செம்மறி அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும். ஆடுகளுக்கு காப்பீடு செய்து தரப்படும் ஆடுகளை குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கு விற்கக் கூடாது என பயனாளிகளிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அனுகி விண்ணப்பங்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.