தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் வரும் 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ள புத்தக திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


புத்தகத்திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்


தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவுக்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா வரும் 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றனர். தஞ்சாவூரில் 7வது முறையாக நடக்கும் இந்த புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.




175 அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது


இந்த புத்தக கண்காட்சிக்காக பந்தல் மற்றும் ஸ்டால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதேபோல் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகளும் நடைபெறுகிறது. கண்காட்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் உணவுத் திருவிழாவிற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 175 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 110 புத்தக அரங்கங்களும், 30 அறிவியல் கண்காட்சி அரங்கமும், 25 உணவு கண்காட்சி அரங்கமும், 10 கோளரங்கமும் என மொத்தமாக 175 அரங்கங்கள் அமைய உள்ளது.


மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு


இந்த புத்தக கண்காட்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், இலக்கியப் பேச்சுக்கள் மற்றும் பிற நிகழ்வுகள் கண்காட்சி நடைபெற உள்ளது. எனவே அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் தண்ணீர் உள்ளே வராதவாறு ஸ்டால்கள் பாதுகாப்பாக அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


மேலும் தஞ்சாவூர் அரண்மனை வளாக கலைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார், பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் இருந்தனர்.