தஞ்சாவூர்: போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், மழை பெய்யாததாலும் காய்கறி சாகுபடிகள் குறைந்துள்ளது. இதனால் தஞ்சாவூர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.65 க்கும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சரபோஜி மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகள்
தஞ்சை அரண்மனை வளாகம் அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும்
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் விற்பனைக்காக எடுத்துச் செல்வது வழக்கம். தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.
உச்சத்திற்கு போன முருங்கைக்காய் விலை
தற்போது சில காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் விலை சற்று உயர தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணம் போதிய மழை இல்லை. மேலும் ஆற்றில் தண்ணீர் வராததால் காய்கறி செடிகள் வாடி உற்பத்தி குறைந்து விட்டது .இதனால் காய்கறிகள் வரத்து குறைந்து விட்டது. முக்கியமாக முருங்கைக்காய் விலையும் கிடுகிடுவென்று தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த வாரம் விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்பனை ஆனது. சில்லரை கடைகளில் ரூ.90 வரை விற்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக முருங்கைக்காய் விலை உயர்ந்து ரூ. 120 முதல் 130 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற காய்கறிகள் விலையும் உயர்வு
அதேபோல் கடந்த வாரம் ரூ. 30 க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.65க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.40-க்கும், கத்தரிக்காய் ரூ.66, கேரட் ரூ.86க்கும், பீட்ரூட் ரூ.56க்கும், சவ்சவ் ரூ.40க்கும், மிளகாய் ரூ.60க்கும், அவரை 76 க்கும், மாங்காய் 46க்கும், கொத்தவரை 50க்கும், பீன்ஸ் 70க்கும், உருளை 48க்கும், பல்லாரி வெங்காயம் 46-க்கும், சின்ன வெங்காயம் 50க்கும், சேனைக்கிழங்கு 96-க்கும், சேப்பக்கிழங்கு 70-க்கும், இஞ்சி 160 க்கும், பூண்டு 230 க்கும், புதினா 60க்கும் மல்லி 35க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விலை அதிகமான காய்கறிகளை குறைவாகவும், விலை குறைவான காய்கறிகளை அதிகமாகவும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். இருப்பினும் நடுத்தர மக்களை இந்த காய்கறி விலை மிகவும் பாதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.