தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே கல்லணை கால்வாய் பாலத்தில் செடி, கொடிகள் மண்டி பராமரிப்பின்றி உள்ளது. பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதனால் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே அவற்றை முழுமையாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தனர். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுத்து வழிபட்டார். அவரது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றினர்.
வானளாவ எழுந்து நிற்கும் ராஜராஜேச்சரம்
மாமன்னன் ராஜராஜன் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் பிரமாண்டமான கோயில் கட்டி அங்கு ஓர் மாபெரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அத்தகைய பெருமை பெற்ற தஞ்சாவூரும், வானளாவ எழுந்து நிற்கும் இராஜராஜேச்சரம் எனப்படும் பிரஹதீஸ்வரருக்கான பெரிய கோயிலும் ஒவ்வொரு பகுதியிலும் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கொண்டுள்ளது என்றால் மிகையில்லை.
தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகளை சுற்றுலாவாக பெரிய கோயிலை பார்ப்பதற்கு அழைத்து வருகின்றனர். அதே போல் அங்கு உள்ள மகாநந்திக்கு பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெறும். அதற்காக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்வார்கள்.
பாலத்தின் இருபுறமும் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகள்
விடுமுறை நாட்களில் பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். அப்போது பெரிய கோயில் பகுதி சாலை போக்குவரத்து நெரிசலில் திணறும். வெளி மாவட்ட, மாநில சுற்றுலாப்பயணிகள் வரும் வாகனங்கள் நிறுத்த கோயில் எதிர்புறத்தில் வாகன நிறுத்தும் பகுதி செயல்பட்டு வருகிறது. இப்படி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பெரிய கோயில் அருகில் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய் ஓடுகிறது. இந்த கல்லணைக்கால்வாய் பாலத்தின் பகுதியில் வாகன நிறுத்துமிடம் செல்லும் வழி உள்ளது. இப்படி அமைந்துள்ள கல்லணைக்கால்வாய் பாலத்தின் இருபுறங்களிலும் அரச மரங்கள் மற்றும் செடி,கொடிகள் அதிக அளவில் வளர்ந்து பராமரிப்பின்றி உள்ளது.
பூச்சிகள் அதிகம் சுற்றுகிறது
மழை பெய்யும் காலம் என்பதால் செடிகள் அதிகம் வளர்ந்து உள்ளது. இதில் கொசுக்கள் பூச்சிகள் அதிகளவில் காணப்படுகிறது. மாலை வேலையில் இந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது. எனவே இந்த செடி கொடிகள் வளர்ந்து இருப்பது பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்கிறது. மேலும் இந்த மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளில் உள்ள பூச்சிகள் விளக்கு வெளிச்சத்தில் கவரப்பட்டு வாகனங்களில் செல்பவர்கள் முகத்தில் விழுகிறது.
இதனால் விபத்துக்களும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பெரிய கோயில் பகுதியை சுற்றிலும் தூய்மையாக இருக்க மண்டிக்கிடக்கும் செடி கொடிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.