காந்தியடிகள் போல் வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை பொது மக்களுக்கு வலியுறுத்தும் விதமாக பாபநாசத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாளில் ஆளில்லா கடை நேற்று ஒரு நாள் மட்டும் திறக்கப்பட்டது.  தஞ்சாவூர்  மாவட்டம் பாபநாசம்  பேருந்து நிறுத்தத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ஆளில்லா கடை  திறக்கப்பட்டது. இந்த கடையை பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் பா.பூரணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் எஸ்.பாலாஜி, துணை ஆளுநர் ஜெ.பி.ஸ்டாலின், ரோட்டரி சங்க நிர்வாகிகள் என்.பத்மநாபன்,  பி.ராஜேந்திரன், ஜெ.ஜெயசேகர், ஐ.சரவணன்,  என்.கே.செந்தில்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




இந்த கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின், விலை அதில் அச்சிடப்பட்டு இருந்தது. அதன் அருகே ஒரு டப்பா வைக்கப்பட்டிருந்தது. இதில் பொருளை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை டப்பாவில் போட்டனர். அதே போல் பணத்தை வைத்துவிட்டு சரியான சில்லறையையும் எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து ரோட்டரி சங்க தலைவர் ஜி.சீனிவாசன்  கூறுகையில், காந்தி அஹிம்சையை ஆயுதமாக்கினார். சத்யாகிரகத்தை கேடயமாக்கினார். இந்த ஆயுதமும், கேடயமும் சம்பந்தப்பட்ட மனிதனை பக்குவப்படுத்தியது மட்டுமல்ல, aஹிம்சையை அரங்கேற்றியவர்களை சிந்திக்க வைத்தது. சில சமயம் மனமுருக செய்தது. மனம் இளகாதோரை விரட்டியடிக்கவும் செய்தது. தனிமனித விடுதலைக்காக உருவான அஹிம்சை ஒரு தேசத்தையே விடுவிக்கும் அளவிற்கு காந்திஜியால் வல்லமை பெற்றது.




மகாத்மாகாந்தி நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த இந்தியாவாக உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். அவர் கண்ட கனவினை நினைவாக்கிட, எங்களது அமைப்பு சார்பில் காந்தி பிறந்த நாளில்,  நேர்மை குறித்த  பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.   22  ஆண்டாக பாபநாசத்தில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.  அதே போல் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த ஆளில்லா கடை ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது.



இந்த கடையி்ல் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள் உள்ளன. அந்தந்த பொருட்களில் விலை குறிப்பிடபட்டிருக்கும். பொருளை எடுத்துக் கொண்டு அதற்குரிய பணத்தை டப்பாவில் வைக்க வேண்டும்.  இந்த கடையில் 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் உள்ளன. லாபம் நோக்கம் கிடையாது. நேர்மை மட்டுமே நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் விற்பனையாகும் தொகையை சேவை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. காந்தி பிறந்த இந்த நன்னாளில் அவரை நம் நெஞ்சுக்குள் வைத்து நன்றி பாராட்டினாலே போதும். நாம் மட்டுமல்ல. நமது இந்தியா முழுவதும் சமத்துவம், அமைதி ஏற்பட்டு விடும் என்றார்.