கும்பகோணம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை நீக்கும் வெளிநாட்டிலிருந்து 5 கோடிக்கு மதிப்பில் தயாரிக்கப்பட்ட நவீன இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 2008-09 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 12 ஆயிரம்  மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மற்றும் சுமார் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் உள்ளது. கும்பகோணம் மாநகராட்சியில் போடப்பட்ட பாதாள சாக்கடையின் குழாய்கள் சிறியதாக போடப்பட்டதால், அடைப்பு ஏற்பட்டு பாதாள மேன்ஹோலில் கழிவு நீர் வெளியேறி சாலையில் ஆறாக ஒடியது. இது போன்ற நிலைமை தினந்தோறும் கும்பகோணம் பகுதியில் பல்வேறு தெருக்கள், சாலைகளில் ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது.




அதன் பின்னர், துாய்மை காவலர்களை கொண்டு, மேன்ஹோலில் இறங்கி, சுத்தம் செய்து வந்தனர். தொடர்ந்து மனிதர்கள் மேன்ஹோலில் இறங்கி சுத்தம் செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டதால், பல்வேறு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் முழவதுமாக சுத்தம் செய்ய முடியாததால், அதிகாரிகள் செய்வதறியாத நிலையில் இருந்து வந்தனர். இந்நிலையில், கும்பகோணத்தில் பாதாள சாக்கடை மேன்ஹோலை சுத்தம் செய்வதற்கு என்று வெளிநாட்டிலிருந்து  5 கோடி மதிப்பில் வரவழைக்கப்பட்ட நவீன இயந்திரமான சூப்பர் சக்கர் என்ற இயந்திரத்தை கொண்டு வந்தனர்.  இதன் மூலம், கும்பகோணம் பகுதியில் மேன்ஹோலில் அடைத்துள்ள அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன இயந்திரம், கோயம்புத்துார் வேல் என்று தனியார் நிறுவனம் வாங்கி வைத்து, தமிழகம் முழுவதும் வாடகைக்கு விட்டு வருகின்றனர். இதனால் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது குறைந்து விடும், நேரமும் மிச்சமாகும். கழிவு நீர்கள் சாலையில் ஒடாமல் நோய்கள் வராமல் காப்பாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக கும்பகோணத்தில் வரவழைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில்  கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன்,  நகர செயலாளர் சு.ப.தமிழழகன், நகராட்சி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


இது குறித்து அதிகாரி கூறுகையில், பாதாள சாக்கடை மேன்ஹோலில் அடைப்பு ஏற்பட்டால், மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி உயிரழப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் உடல் நலக்குறைவால் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் ரயில் நிலையம் அருகிலுள்ள மேன்ஹோலை சுத்தம் செய்வதற்காக இறங்கிய துாய்மை காவலர் ஒருவர், விஷவாயு தாக்கி மேன்ஹோலுக்குள்ளே இறந்தார்.  இதனால் பாதாள சாக்கடை மேன்ஹோலை சுத்தம் செய்வது என்பது கேள்வி குறியானது.


 இதனையடுத்து, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 5 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் சூப்பர் சக்கர் என்ற நவீன இயந்திரம், கோயம்புத்துார் மாவட்டத்திலுள்ள வேல் என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வாங்கி வைத்து, வாடகைக்கு விட்டு வருகின்றனர் என்ற தகவல் கிடைத்தது. தகவலையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கும்பகோணம் பகுதியில் சோதனைக்காக பாதாள சாக்கடை மேன்ஹோலை சுத்தம் செய்த போது, முழுவதுமாக சுத்தம் செய்தது. இதனையடுத்து அந்த  நவீன இயந்திரம் வாடகைக்கு வரவழைக்கப்பட்டு, கும்பகோணம் செம்போடை கிராமத்தில் பாதாள சாக்கடை அடைப்புகளை சீர் செய்தனர். இந்த இயந்திரத்தை ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வாடகை வசூலிக்கப்படுகிறது.


இந்த இயந்திரத்தை வாடகைக்கு தேவைப்பட்டால், சுமார் 15 நாட்களுக்கு முன்பு, 50 சதவீதம் முன் பணம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். தற்போது கும்பகோணம் பகுதிக்கு வந்துள்ள இந்த இயந்திரம் 20 நாட்கள் வரை இருந்து, அனைத்து மேன்ஹோலையும் சுத்தம் செய்யவுள்ளது. மேலும் மேன்ஹோலில் உள்ள கற்கள் உள்ளிட்ட அனைத்து கனமான மற்றும் இலகாக உள்ள பொருட்களை, உறிஞ்சி எடுத்து விடும். பின்னர், அப்பொருட்கள் வாகனத்திலேயே தங்கி விடும், மீதமுள்ள கழிவு நீர் மட்டும், சுத்தம்செய்த மேன்ஹோலிலேயே விடப்படும். இதனால்  பாதாள சாக்கடை பணிகளை சுத்தம் செய்ய மனிதர்கள் இறங்கி பணியாற்ற தேவையில்லை. இதன் மூலம், கழிவு நீர் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்றார்.