தஞ்சாவூர்: வெள்ள நிவாரண நிதிக்காக தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்க ஏஐடியூசி போக்குவரத்து நிர்வாகிகள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்கத் துணைத் தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் பொருளாளர் ராஜமன்னன், நிர்வாகிகள் செல்வராஜ், தமிழ் மன்னன், முருகவேல், ராஜேஸ்கண்ணன், ரெங்கதுரை,  ஞானவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


கூட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலநூறு கோடி பொருட்கள் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் தமிழ்நாடு அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.


இந்நிலையில் அதற்கு உதவிகரமாக வெள்ள பாதிப்பிற்கு முதல்வர் நிவாரண நிதிக்கு கும்பகோணம் மண்டல ஏஐடியூசி உறுப்பினர்கள் தங்களின் ஒருநாள் சம்பளத்தை வழங்குவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.    போக்குவரத்து கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் ஓய்வுதியர் சங்க கூட்டமைப்புகள் சார்பில் தொழிலாளர்கள் 15வது ஊதிய ஒப்பந்தம், காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வு, வாரிசு பணி வழங்குவது, போக்குவரத்து கழக செயல்பாட்டுக்கு அரசு நிதி வழங்குவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்து, தொழிலாளர் ஆணையர்  27ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.


இந்த பேச்சுவார்த்தையில் ஓய்வூதியர்கள் மற்றும் பணியில் உள்ள தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் சுமூகதீர்வு காண இந்த கூட்டம் தொழிலாளர் ஆணையரையும், தமிழ்நாடு அரசையும், கழக நிர்வாகங்களையும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 2015 வெள்ளத்தை விட இந்த முறை கடும் பாதிப்பை சென்னை மக்கள் சந்தித்தனர். மாநகரில் பரவலாக பல நாட்கள் நீர் சூழ்ந்திருந்தது. பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. பாலுக்காக நீண்ட வரிசையில் மக்கள் இதுவரை நின்றதில்லை. மின்சாரமும், தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது பொதுமக்களை முற்றிலுமாக முடக்கியது. 




2015-ல் நவ.8 முதல் 10 வரை வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி பெருமழையை கொடுத்தது. அப்போது அம்பத்தூரில் 20 செமீ, நுங்கம்பாக்கத்தில் 14 செமீ மழை பெய்தது. பிறகு, நவ.12 முதல் 18 வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி கனமழை பெய்தது. தொடர்ந்து, நவ.28 முதல் டிச.4-ம் தேதி வரை காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இதன் தாக்கத்தால் டிச.1-ம் தேதி விட்டுவிட்டு மழை பெய்து, அன்று இரவு அதிகனமழை கொட்டி தீர்த்தது. 24 மணி நேரத்தில் தாம்பரத்தில் 49, செம்பரம்பாக்கத்தில் 47, மீனம்பாக்கத்தில் 35, நுங்கம்பாக்கத்தில் 29 செமீ மழை பதிவானது. இந்த வெள்ளத்தின்போது புறநகர்களை விட சென்னையில் குறைவாக மழை பெய்தது.


2023-ல் டிச.3, 4 தேதிகளில் இடைவிடாது முறையே நுங்கம்பாக்கத்தில் 23, 24 செமீ (மொத்தம் 47 செமீ), மீனம்பாக்கத்தில் 25, 18 செமீ (மொத்தம் 43 செமீ), தாம்பரத்தில் 17, 23 செமீ (மொத்தம் 40 செமீ), செம்பரம்பாக்கத்தில் 16, 20 செமீ (மொத்தம் 36 செமீ) அதிகனமழை பெய்துள்ளது. இந்த முறை வெள்ளத்தை ஏற்படுத்திய மழை புறநகர்களை விட மாநகருக்குள் அதிகமாக பெய்துள்ளது. இதேபோல்தான் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துகுடி உட்பட 4 மாவட்டங்களில் கனமழையால் ெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதில் பாதித்த மக்களுக்காக பல்வேறு தரப்பினரும் தங்களால் ஆன உதவிகளை வழங்கி வருகின்றனர்.